மும்பை: பணவீக்கத்தின் அளவு குறைய தொடங்கி இருந்தாலும், பணவீக்கம் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. நாங்கள் ஒரு புறம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் கூறினார்.
பணவீக்கம் இரண்டு இலக்கத்தில் இருப்பதால், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடன் கொள்கையில் வட்டி குறைப்பு பற்றி எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க கடந்த வாரத்தில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம், வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன் வட்டி ஆகியவைகளை குறைத்துள்ளது. இதன் மூலம் நிதி, வங்கி சந்தையில் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி பணப்புழக்கம் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அத்துடன் நேற்று பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடு வரை இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் பணவீக்கம் ஏழு விழுக்காடாக குறையும் என்று கணித்துள்ளது.
இன்று சுப்பாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரிசர்வ் வங்கி மொத்த விலை அட்டவணையின் அடிப்படையில் மட்டுமல்லாது. மற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையையும் சேர்த்து பணவீக்கத்தை கணக்கிடுகிறது. இந்த நிலையில் பணவீக்கம் கவலையளிக்க கூடியதாக இருக்கும்,.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இதன் விலை நிலையாக இல்லாமல் உள்ளது. அத்துடன் கரீப் பருவத்தில் உணவு தானியங்கள், பணப்பயிர்களின் உற்பத்தி மதிப்பிட்டதை விட குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. அந்நியச் செலவாணி சந்தையில் ரூபாயின் மதிப்பு குறைவதும் பணவீக்கத்தை அதிகரிக்கும் மற்றொரு காரணியாக உள்ளது என்று கூறிய சுப்பாராவ், இதனை கருத்தில் கொண்டு வளர்ச்சி குறையாமல் இருக்குமாறும், விலை உயராமல் இருக்கும் படி ரிசர்வ் வங்கி பொருளாதார, கடன் கொள்கையை அறிவித்துள்ளது என்று கூறினார்.