உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைவதால், கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 15 லட்சம் பீப்பாய் அளவு குறைக்க “ஒபெக்” நாடுகள் முடிவு செய்துள்ளன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பு “ஒபெக்” [ Organization of Petroleum Exporting Countries (OPEC)]. இந்த அமைப்பில் சவுதி அரேபியா, ஈரான், குவைத், ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், அங்கோலா, அல்ஜீரியா, ஈக்வடார், லிபியா, வெனிசுலா, குவாட்டர் உட்பட 13 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் வியன்னாவில் உள்ளது. நேற்று இங்கு நடந்த ஒபெக் அமைப்பின் கூட்டத்தில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின், கச்சா எண்ணெய் வர்த்தகத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கச்சா எண்ணெயின் விலை சரிவை தடுத்து நிறுத்த ஏதுவாக தினமும் 15 லட்சம் பீப்பாய் ( 1 பீப்பாய்-158.98 லிட்டர்) கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக தற்போதுதான், ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய்
உற்பத்தியை நவம்பர் மாதத்தில் இருந்து குறைப்பது என்று முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒபெக் நாடுகள் தினசரி 288 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. இதில் நவம்பர் மாதம் முதல் தினசரி 15 லட்சம் பீப்பாய் அளவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தக துறை அமைச்சர் அலி அல் நய்மி (Ali al-Naimi) கூறுகையில், இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்தார்.
ஒபெக் அமைப்பின் தலைவரும், அல்ஜிரியாவின் கச்சா எண்ணெய் வர்த்தக துறை அமைச்சருமான சாகிப் கலீல் (Chakib Khelil) கூறுகையில், தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என்ற முடிவு, முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
குவாட்டர் கச்சா எண்ணெய் வர்த்தக துறை அமைச்சர் அப்துல்லா பின் ஹமாத் அல்-அட்டியா ( Abdullah bin Hamad al-Attiyah) கூறுகையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, டிசம்பர் மாதம் மேலும் உற்பத்தியை குறைப்பது பற்றி பரிசீல்க்கப்படும் என்று தெரிவித்தார்.
வெனிசுலா அதிபர் ஹகோ சாவேஜ் (Hugo Chavez ) கூறுகையில், ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 70 முதல் 90 டாலராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவால், இதன் விலை பீப்பாய் 7 டாலராக குறைந்தாலும், தனது அரசுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்து விடாது.
கடந்த 1990ஆம் ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது கூட, தங்கள் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
இதன் விலை 80 முதல் 90 டாலராகவோ அல்லது 70 முதல் 90 டாலராகவோ இருக்க வேண்டும். மீண்டும் 2002, 2003 ஆம் ஆண்டுகளைப் போல 22 - 28 டாலராக குறைய அனுமதிக்கக் கூடாது என்றும் சாவேஜ் குறிப்பிட்டார்.
கச்சா எண்ணெய் விலை 2006 ஆம் ஆண்டு இருந்ததைப் போல பீப்பாய் 55 டாலராக குறைந்தாலும் கூட,
தமது அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்று ஏற்கனவே வெனிசுலா அதிபர் ஹூகு சாவேஜ் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
அமெரிக்கா வாங்கும் மென் கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடுகையில், வெனிசுலா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 10 டாலர் வரை குறைவாக இருக்கும்.
அதே நேரத்தில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர்களும், அமெரிக்க பங்குச் சந்தை நிபுணர்களும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால், வெனிசுலா அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை ஜூலை 11ஆம் தேதி பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலராக அதிகரித்தது.
அதன் பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உற்பத்தி சரிவு, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், கச்சா எண்ணெய் தேவை குறைந்தது.
சென்ற மாத நிலவரப்படி பீப்பாய்க்கு 40 டாலர் வரை குறைந்தது. இதன் விலை மேலும் 7.1 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
சர்வதேச எரிசக்தி அமைப்பு கடந்த 10 ஆம் தேதி, இந்த வருடம் வளர்ந்த நாடுகள் உட்பட தொழில் துறை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை 2.2% குறையும். அத்துடன் எல்லா நாடுகளையும் சேர்த்து கணக்கிட்டால் கச்சா எண்ணெய் தேவை அரை விழுக்காடு குறையும் என்ற கணிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க முன்பேர சந்தையில், அமெரிக்கா வாங்கும் கச்சா எண்ணெய் விலை டிசம்பர் மாதத்திற்கு 1 பீப்பாய் 64.15 டாலராக இருந்தது. இது முந்தைய விலையை விட 3.69 டாலர் குறைவு.
இதே போல் லண்டன் பிரின்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 62.05 டாலராக குறைந்தது. (முந்தைய விலையை விட 3.87 டாலர் குறைவு)
உலக அளவில் கச்சா எண்ணெய் வணிகத்தில் ஈடுபடும் நிபுணர்கள் ஒபெக் முடிவு பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜூலை மாத விலையான 147 டாலருடன் ஒப்பிடுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலை 56 விழுக்காடு சரிந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல். டீசல் போன்ற எரிபொருட்களின் உபயோகம் குறைந்துள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் தேவை தினசரி 20 லட்சம் பீப்பாய் குறைந்துள்ளது. தற்போதைய உற்பத்தி குறைப்பால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விடாது. இதன் விலை பீப்பாய் 50 டாலர் என்ற அளவிற்கு குறைய வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.