ஹைதராபாத்: பரஸ்பர நிதி நிறுவனமான (மியூச்சுவல் பண்ட்) யூ.டி.ஐ, வெல்த் பில்டர் பண்ட் என்ற யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. நிதிச் சந்தையில் பணப்புழக்கமும் குறைந்துள்ளது
இந்த சூழ்நிலையில் யூ.டி.ஐ பரஸ்பர நிதி நிறுவனம், வெல்த் பில்டர் பண்ட்-2 என்ற பெயரில் புதிய யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த யூனிட் வெளியீடு மூலம் ரூ.700 கோடி திரட்டப்படும்.
இதன் யூனிட்டுகளுக்கு நவம்பர் 19 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து ஹைதரபாத்தில் யூ.டி.ஐ நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் டி.மோகந்தி [UTI AMC Country-Head (Sales)] கூறுகையில், இதில் திரட்டப்படும் பணம் நீண்ட கால முதலீடு அடிப்படையில் பங்குச் சந்தை, நிதிச் சந்தையில் முதலீடு செய்யப்படும். அத்துடன் தங்க முதலீடு, கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும்.
பரஸ்பர நிதி நிறுவனங்களின் வரலாற்றில் முதன் முறையாக பங்குச் சந்தை, தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இருந்து திரட்டப்படும் நிதியில் 65 விழுக்காடு மருந்து, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். மீதம் உள்ள 35 விழுக்காடு தங்கத்தில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.
யூ.டி.ஐ நிதி மேலாளர் லலித் நம்பியார் கூறுகையில், இந்த யூனிட்டுகளில் தனி நபர்கள், அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு யூனிட் விலை ரூ.10. இதில் விண்ணப்பிக்க கடைசி நாளில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு, யூனிட்டை திரும்பி கொடுத்து பணம் பெறலாம். தினசரி யூனிட் மதிப்பு அடிப்படையில் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.