ரூ.10,200 கோடி கடன் தள்ளுபடி தொகை : நபார்டு வங்கி வழங்கியது!
சனி, 18 அக்டோபர் 2008 (18:03 IST)
இந்திய அரசின் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டம் 2008-ன் கீழ் கூட்டுறவு மற்றும் மண்டல கிராம வங்கிகளுக்கு ரூ.10,200 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக நபார்டு வங்கியின் தலைவர் சாரங்கி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு மற்றும் மண்டல கிராம வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டம் 2008-ன் கீழ் நிலுவைத் தொகையை நபார்டு வங்கி அவ்வப்போது வழங்கி வருகிறது.
தற்போது கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வங்கிகள் சமர்ப்பித்த தணிக்கை சான்றிதழ்களின் அடிப்படையில் ரூ.10,200 கோடி விடுவித்துள்ளது. இது மொத்த கணக்கான ரூ.17,500 கோடியில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாகும் என்று நபார்டு வங்கியின் தலைவர் யு.சி. சாராங்கி தெரிவித்துள்ளார்.