விமான பெட்ரோல் விலை குறைக்க வேண்டும்- மத்திய அமைச்சர்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:14 IST)
புது டெல்லி: விமான பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படீல் கூறினார்.

பொருளாதார நெருக்கடியால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான பயணிகளின் எண்ணிக்கை, சரக்கு போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து நிறுவனங்கள் செலவை குறைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் 1,900 பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது.

(நேற்று இவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்துள்ளது)

இதோ போல் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியா நிறுவனம் 15 ஆயிரம் ஊழியர்களை மூன்று முதல் 5 வருடம் வரை ஊதியம் இல்லா விடுமுறை அளிப்பது பற்றி அறிவித்துள்ளது.

இந்நிலையிலமத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், மற்ற நாடுகளில் உள்ளதை விட, விமான பெட்ரோலின் விலை இந்தியாவில் 70 விழுக்காடு அதிகாமக உள்ளது. இதன் விலையை உடனடியாக குறைக்க வேண்டியது அவசியம்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் 1,900 ஊழியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டது பற்றி மகிழ்ச்சி அடைகின்றேன். அதே நேரத்தில் விமான போக்குவரத்து துறையில் புதிய வேலை வாய்ப்பு ஏற்டாது என்பது வருத்தமளிக்க கூடியாதாக இருக்கிறது என்று கூறினார்.

விமான போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டம் அடைவதால், அரசிடம் அவைகளுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்த மாதிரியான


நிவாரணம் அளிக்கப்படும் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நான் 1,900 பேர் வேலை நீக்கத்தினால் எழுந்து நெருக்கடியை தீர்க்க முயற்சி எடுத்தேன். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து யாரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. நான் விமான போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் நேற்று ஜெட் ஏர்வேஸ் சேர்மன் நரேஷ் கோயலிடம் பேசினேன். அவர் கூடிய விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததாக அமைச்சர் பிரபுல் படீல் கூறினார்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெட்ரோலுக்கு பணம் கொடுக்காமல் உள்ளது என்ற புகாரை பற்றி பிரபுல் படீல் கூறுகையில், பெட்ரோலுக்குரிய கட்டணத்தை கொடுப்பதற்கு 60 நாட்கள் காலக்கெடு உள்ளது. இந்நிலையில் அவை பணம் கொடுக்கவில்லை என்று கூற முடியாது என்று விளக்கமளித்தார்.

முன்னதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்கனவே, விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கடனில் பெட்ரோலை வழங்கி வருகின்றன. இந்த கடன் நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க முடியாது. பெட்ரோலிய நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளன என்று கூறியிருந்தார்.

ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் ஆகிய இரண்டு விமான போக்குவரத்து நிறுவனங்களும் பெட்ரோல் வாங்கிய வகையில் ரூ.2,024 கோடி நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்