மிளகாய் பயிரிடலாம்- வேளான் பல்கலைக் கழகம்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (12:26 IST)
கோவை: ஐப்பசி பட்டத்தில் மிளகாய் விதைப்பு மேற்கொள்ளும் படி, விவசாயிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் [Tamil Nadu Agricultural University (TNAU)] உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை குறித்த ஆய்வு மையம் செய்ல்பட்டு வருகிறது. இது அவ்வப்போது விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உள்ள சந்தை வாய்ப்பு, விலை நிலவரம் போன்றவைகளை ஆய்வு செய்து அறிவிக்கிறது.

இந்த ஆய்வு ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் என்.ரவீந்திரன் கூறுகையில், மிளகாய் உற்பத்தி, சந்தை நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். ஐப்பசி பட்டம் நெருங்கிவரும் சமயத்தில், மிளகாய் பயிரிடலாமா என்று முடிவு எடுக்காமல் இருக்கின்றனர்.

உள்நாட்டு சந்தையில் அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து சாகுபடி செய்த புதிய மிளகாய் விற்பனைக்கு வர ஆரம்பிக்கும். முதலில் மத்திய பிரதேசத்தில் இருந்து விற்பனைக்கு வரும். அடுத்து நவம்பர் மாத வாக்கில் கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஜனவரி மாதம் முதல் மிளகாய் விற்பனைக்கு வர துவங்கும். இவை மே மாதம் வரை சந்தைக்கு வரும்.

மிளகாய் அதிகமாக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தான் விற்பனைக்கு வரும். இந்த சமயத்தில் ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு வியாபாரிகள் மிளகாயை கொள்முதல் செய்து, குளிர்பதன கிடங்குகளில் இருப்பில் வைப்பார்கள்.

மிளகாய் கெட்டு போகாமல் குளிர் பதன கிடங்குகளில் வைப்பதற்கு மாதத்திற்கு 1 டன்னுக்கு ரூ. 250 முதல் ரூ.300 வரை செலவாகும்.

இந்த மாதத்தில் சென்னை சந்தைக்கு ஆந்திராவில் குண்டூர், தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகரில் இருந்து விற்பனைக்கு வரும். சென்னைக்கு தினசரி 40 கிலோ கொண்ட 5 ஆயிரம் மூட்டைக்கும் அதிகமாக விற்பனைக்கு வரும்.

மிளகாய் விலை பற்றிய ஆய்வில் இருந்து, மிளகாயை செடியில் இருந்து பறிக்கும் சமயத்தில் விலை கிலோ 47 முதல் ரூ.50 என்ற அளவில் இருப்பது தெரிய வருகிறது.

இதே விலை ஜனவரி முதல் மே வரை நீடிக்கும். அதற்கு பிறகு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே விவசாயிகள் சிலர் ஒன்று சேர்ந்து மிளகாயை அருகில் உள்ள குளிர்சாதன கிடங்கில் இருப்பில் வைத்துக் கொள்ளலாம். இதன் பறிப்பு காலம் முடிந்தவுடன், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்