பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படாது- தியோரா!

வியாழன், 16 அக்டோபர் 2008 (15:10 IST)
புது டெல்லி: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 61 டாலராக குறைந்தால் மட்டுமே, பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

சென்ற மாதத்தில் 1 பீப்பாய் விலை 67 டாலராக குறைந்தால், பெட்ரோலிய நிறுவனங்களின் உற்பத்தி செலவுக்கு கட்டுப்படியாக கூடியதாக இருந்தது.

அதே நேரத்தில், இது வரை இல்லாத அளவாக கடந்த வாரம் டாலரின் மதிப்பு ரூ.49.30 ஆக அதிகரித்தது. டாலர் மதிப்பு உயர்வினால், கச்சா எண்ணெய் விலை 61 டாலராக இருந்தால் மட்டுமே, பெட்ரோலிய நிறுவனங்களின் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியும் என்ற சூழ்நிலை உருவானது.

இவை வாங்கும் கச்சா எண்ணெய்க்கு ரூபாய் கணக்கில் அதிக பணம் கொடுக்கின்றன. இதனால் உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன.

டாலருக்கு நிகரான மதிப்பு 1 ரூபாய் குறைந்தாலும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருடத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தியோரா தெரிவித்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செலவிற்கும் குறைவான விலையில் பெட்ரோல், டீசல், மண் எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்கின்றன.

இதனால் இந்த நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்