வளர்ச்சியை பாதிக்கும் விலை உயர்வு-மன்மோகன் .சிங்.

புது டெல்லி: பெட்ரோலிய கச்சா எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, தீவிரவாதம் ஆகியவை வளர்ச்சிக்கு பாதிப்பாக இருப்பதாகவும், இதை சமாளிக்க ஐ.நா சபை, ஜி-8 அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டுவருவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

புது டெல்லியில் இன்று “இப்ஸா” என்று அழைக்கப்படும், இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு அமைப்பின் [India-Brazil-South Africa (IBSA) Forum] மூன்றாவது வருடாந்திர கூட்டம் தொடங்கியது.

இதை துவக்கிவைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பல நாடுகளின் வளர்ச்சிக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அத்துடன் தீவிரவாதம் ஆகியவை தடையாக உள்ளது. எல்லா தரப்பிலும் வளர்ச்சியை எட்ட தோஹா சுற்று பேச்சுவார்த்தையில் (உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை) பயனுள்ள முடிவு எட்ட வேண்டும் எனறு கூறினார்.

உலக அளவில் சமசீரான வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவில் நிலையான தன்மை உண்டாக இப்ஸா அமைப்பு முக்கிய பங்கு ஆற்றுவது பற்றி குறிப்பிட்டு பேசிய மன்மோகன் சிங், இந்த அமைப்பு சர்வதேச அரங்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில் நமது வளர்ச்சிக்கு முன்னுரிமையை, பாதிக்காத அளவு, இந்த பிரச்சனையை எவ்வாறு தீர்வு காண்பது என்று கூறவேண்டும். இது உலக அளவில் உதாரணமாக இருக்க வேண்டும்.

இப்ஸா அமைப்பில் வேறுபட்ட கண்டங்களில் உள்ள ஜனநாயக தன்மை வாய்ந்த, மூன்று வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு தெற்கு-தெற்கு நாடுகளின் கூட்டுறகவுக்கு உதாரணமாக உள்ளது.

நாம் எவ்வாறு மேலும் முன்னேறுவது, இதற்கு எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்