புது டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2007-08 ஆம் நிதி ஆண்டில் 162.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6.56 லட்சம் கோடி) மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இது நிர்ணயித்த இலக்கையும் விட அதிகம்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008 மார்ச் வரையிலான காலத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி குறித்த விபரத்தை மத்திய வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் பிரிவு தலைமை இயக்குனரகம் (டிஜிசிஐ அண்ட் எஸ்) வெளியிட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது :
2007-08 நிதி ஆண்டில் 162.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிதி ஆண்டில் 160 பில்லியன் டாலர் என்ற அளவை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை தாண்டி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது முந்தைய நிதி ஆண்டில் நடந்த ஏற்றுமதியைவிட 29.02 விழுக்காடு அதிகம். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5.72 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.6.56 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 14.71 விழுக்காடு அதிகம்.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பொறியியல் தொடர்பான சரக்குகள், பெட்ரோலியப் பொருட்கள், விவசாயப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விவசாயம் மற்றும் அது தொடர்பான பொருட்கள் 55.51%, பெட்ரோலிய பொருட்கள் 51.97 % தாதுக்கள், கனிமப்பொருட்கள் 30.34 %, பொறியியல் துறை தொடர்பான சரக்குகள் 27.34%, ரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் 23.27% ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து 2006-07 ஆம் நிதி ஆண்டில் ஜவுளி, கைவினைப் பொருள், விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் இந்த பொருட்களின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.