புது டெல்லி: பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை இந்திய வங்கிகள் சங்கம் நிர்ணயிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) நிறுவனங்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்க இன்று ரிசர்வ் வங்கி ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க போவதாக அறிவித்தது.
இந்த கடன் வழங்கும் முறை பற்றி நிதி அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கிகளின் மத்திய அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம், பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை முடிவு செய்யும்.
இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்க, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.நாராயணசாமி, வங்கிகளிடமும், பரஸ்பர நிதி நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு முடிவு செய்வார்.
இதற்கு ஈடாக பரஸ்பர நிதி நிறுவனங்கள், வைப்பு நிதி சான்றிதழை [certificate of deposits (CDs)] கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு கடனுக்கு ஈடாக, வைப்பு நிதி சான்றிதழை வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அரசு, பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் கூறியுள்ளது,
பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன் பெறும் வசதியை செய்து தரும் படி, அரசிடம் கேட்டுக் கொண்டன. இதை தொடர்ந்து, அரசு பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி மற்றும் ரிசர்வ் வங்கியிடம், இதை பற்றி பரிசீலிக்கும் படி கேட்டுக் கொண்டது என்று சிதம்பரம் தெரிவித்தார்.
மத்திய அரசின் வேண்டுகோளைத் தொடர்ந்து, செபி சேர்மன் சி.பி.பவே, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி பரஸ்பர நிதி நிறுவனங்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரூ.20 ஆயிரம் கோடி கடனாக வழங்குவதாக அறிவித்தது.