மும்பை: மகாராஷ்டிரா வீட்டு வசதி வர்த்தக சங்கம் மும்பையில் பந்த்ரா குர்லா அரங்கத்தில் மாபெரும் வீட்டு வசதி வர்த்தக கண்காட்சியை நடத்துகிறது. இது இன்று முதல் வருகின்ற 12 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த கண்காட்சியில் 85 ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், 15 கட்டுமான நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.
இதில் குறைந்த வருவாய் பிரிவினர் முதல் அதிக வருவாய் பிரிவினருக்கு தகுந்தார் போல், பல்வேறு விலைகளின் குடியிருப்புக்கள் கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன. அத்துடன் வணிக நோக்கத்திற்கான கட்டிடங்களும் இடம் பெற்று உள்ளன. இங்கு குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு கடன் வசதியும் செய்து கொடுக்கப்படும்.
இந்த கண்காட்சியில் குடியிருப்பு, கட்டிடங்களை வாங்குபவர்களுக்கு முத்திரை தாள் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த கண்காட்சியின் அமைப்பாளரான ஹாரிஸ் படீல் கூறுகையில், இந்த விழாக்காலத்தில் வீடு வாங்க நினைப்பவர்கள் புதிய வீடுகளை வாங்குவார்கள். எங்கள் சங்கம் இவர்களின் வசதிக்காக ரியல் எஸ்டேட் துறையில் புதிய முயற்சிகளை செய்து வருகிறது என்று கூறினார்.
இதன் துணை அமைப்பாளர் தீபக் கோராடியா கூறுகையில், தற்போது வீடு வாங்க நினைப்பவர்கள் இப்போது வாங்கலாமா அல்லது விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டுள்ளனர். இநத கண்காட்சி வாயிலாக நாங்கள் ஒவ்வொருவரும் கனவு காணும் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.
இந்த கண்காட்சியின் போது, வீடு வாங்க நினைப்பவர்களுக்கு தேவையான சட்ட உதவி, வீட்டு கடன், வரி பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.