நானோ தொழிற்சாலை: குஜராத் அரசுடன் டாடா உடன்படிக்கை!
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (16:06 IST)
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இன்று மாலை நானோ கார் தொழிற்சாலை அமைவதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகிறது.
குஜராத் மாநிலத்தில் சனாந்த் என்ற இடத்தில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை அமைப்பது என இறுதியாக முடிவெடுத்தது.
குஜராத் தலைநகர் அகமாதாபாத்திற்கு டாடா குழமத்தின் தலைவர் ரத்தன் டாடா மதியம் 3.30 மணியளவில் வந்தார். இவருடன் டாடா மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவி காந்த் உட்பட உயர் அதிகாரிகள் வந்து இருந்தனர். இவர்கள் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
நானோ கார் தொழிற்சாலையை அமைப்பதற்கு, குஜராத் மாநில அரசுக்கும், டாடா மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாலை 5.30 மணியளவில் கையெழுத்தாகும் என்று தகவல் துறை ஆணையர் பாக்யிஸ் ஜா தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலை ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள சனாந்த் என்ற ஊரில் அமைக்கப்படும். இந்த ஊரில் ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாக 2,220 ஏக்கர் நிலம் உள்ளது. இது மாநில அரசின் பெயருக்கு மாற்றம் செய்யப்படும்.
இதில் நானோ கார் தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை, குஜராத் மாநில அரசு டாடா மோட்டார் நிறுவனத்திற்கு வழங்கும்.
அகமாதாபாத்தில் இருந்தும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே சனாந்த் அமைந்துள்ளது. இதனால் கார் தொழிற்சாலைக்கு ஏற்றதாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.