சிறப்பு பொருளாதார மண்டலம்- 95% விவசாயிகள் எதிர்த்து வாக்களிப்பு!
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:17 IST)
மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக 22 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளில் 95 விழுக்காடு பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் முகேஷ் அம்பானியின் தலைமாயிலான ரிலையன்ஸ் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது.
இதற்கு நிலம் கையகப்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்தது. இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜ்காட் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் என்.டி.படீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
விவசாயிகளின் எதிர்ப்பால் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், கடந்த ஜூலை மாதம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை கையக்கபடுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தார்
அத்துடன் அரசு 22 கிராமங்களிலும் உள்ள விவசாயிகளிடமும், விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று போராட்டம் நடத்திய என்.டீ. படீல் இடம் உறுதியளித்திருந்தார்.
இதன்படி கடந்த மாதம் 21ஆம் தேதி, 22 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவசாய நிலங்களை கொடுக்க சம்மதமா, இல்லையா என்ற வாக்கெடுப்பு நடந்தது.
இதில் 6,199 விவசாயிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இவர்களில் 5,866 பேர் நிலம் கொடுக்க சம்மதம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து என்.டீ. படீல் கூறும் போது, மாநில அரசு நிலம் கையகப்படுத்தல் சட்டம் பிரிவு 4 மற்றும் 6இன் கீழ் கொடுத்துள்ள நிலம் கையகப்படுத்தல் நோட்டீஸ்களை திரும்ப பெற வேண்டும். நிலத்தை விவசாயிகளிடம் திருப்பி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசு இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிடவில்லை. ஆனால் உலக மயமாக்கலுக்கு எதிரான குழு, இந்த முடிவுகளை நேற்று வெளியிட்டது.