நேரடி வரி வசூல் 32.54 ‌விழு‌க்காடு உய‌ர்வு!

திங்கள், 6 அக்டோபர் 2008 (18:42 IST)
நேரடி வரி வசூல் கடந்த ஆண்டைவிட நட‌ப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 32.54 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது.

நட‌ப்பு நிதியாண்டின் (2008-09) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் நேரடி வரிகள் மூலம் கிடைத்த நிகர வசூல் ரூ.1.47 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டில் இது ரூ.1.11 லட்சம் கோடியாக இருந்தது. இது 32.54 ‌விழு‌க்காடு அதிகமாகு‌ம்.

நிறுவனங்கள் செலுத்திய வரித்தொகை கடந்த ஆண்டில் ரூ.70.24 லட்சம் கோடியாக இருந்தது. இது 35.65 ‌விழு‌க்காடு அதிகரித்து ரூ.95.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கட‌ந்த ஆ‌ண்டி‌ல் ரூ.40.73 ஆயிரம் கோடியாக இருந்த தனிநபர் வருமான வரி 26.94 ‌விழு‌க்காடு உயர்ந்து ரூ.51.70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஊழியர்களின் சம்பளம் தவிர்த்த இதர படிகள் மீதான வரி வசூல் 62.23 ‌விழு‌க்காடும், பங்கு பத்திர பரிமாற்று வரி 2.72 ‌விழு‌க்காடும், வங்கி பணப்பரிமாற்ற வரி 17.65 ‌விழு‌க்காடும் அதிகரித்துள்ளது.

தனிநபர் வருமான வரிக்கு மத்திய பட்ஜெட் 2008இ‌ல் சலுகைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தனிநபர் சம்பளத்தில் இருந்து வரி பிடித்தம் செய்தல் (டி.டி.எஸ்.) மூலம் கிடைத்த வரி வசூல் 28 ‌விழு‌க்காடு உயர்ந்துள்ளது.

நிறுவனங்களின் வருமானத்தில் இருந்து வரி பிடித்தல் மூலம் கிடைத்த வரி வசூல் 52 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் அல்லாத வரி செலுத்துவோர்கள் சுயமதிப்பீடு செய்து செலுத்திய வரி முறையே 111 ‌விழு‌க்காடும் 71 ‌விழு‌க்காடும் அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்