துபாயிலும் நிதி நெருக்கடி?

சனி, 4 அக்டோபர் 2008 (18:28 IST)
துபாய் அரசும், அதன் நிறுவனங்களும் அயல் நாட்டு வங்கிகளில் வாங்கிய 20 பில்லியன் டாலர் கடனை மீண்டும் புதுப்பிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உலக நிதி, வங்கி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், துபாய் அரசும், அதன் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் துபாய் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கிகளில் பணப்புழக்கம் குறைந்தால், அவை ஏற்கனவே வாங்கிய கடனை புதுப்பிக்க மாட்டாது. குறிப்பாக பொருளாதார தேக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனங்களின் கடன் புதுக்பிக்காது என்று ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளதாக ஐக்கிய அரபு குடியரசில் இருந்து வெளிவரும் தி நேஷனல் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியில் மாஸ்ரக் (Mashreq bank) வங்கியைச் சேர்ந்த மூத்த அதிகாரி இப்ராகிம் மசூத், துபாயைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாததால், அவைகளின் பெயர் கெட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகையில், ஒரு நிறுவனம் அதிக அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதன் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி அதிக நிதி திரட்டி இருப்பார்கள். இவ்வாறு திரட்டப்பட்ட நிதி அதிக காலத்திற்கு திருப்பி கொடுக்க முடியாமல் இருக்க முடியாது.

துபாய் ஹோல்டிங்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் அதிக அளவு கடன் வாங்கியுள்ளன. இதன் காலம் முடிவடையும் போது, இவர்களால் திருப்பி கொடுக்க முடியுமா என்று உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்று கூறியதாக தி நேஷனல் தெரிவித்துள்ளது

கல்ப் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் எக்கார்ட் வொயிட்ஜ் (Eckart Woertz) ஐக்கிய அரபு குடியரசில், குறிப்பாக துபாயில் பணப்புழக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தி நேஷனல் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.

துபாய் மரினா உட்பட பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டு முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இவை விற்பனை செய்யவோ அல்லது வாடகைக்கு விடவோ முடியாமல் உள்ளது. ஏனெனில் இதன் வாடகை மிக அதிகம். அத்துடன் வாங்கி இலாபத்திற்கு விற்பனை செய்பவர்கள் கட்டிடங்களை வாங்குவது அதிக அளவு குறைந்து விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்