இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் (எல்.ஐ.சி.) அக்டோபர் மாதத்தை சமூக பாதுகாப்பு காப்பீடு மாதமாக அறிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் குறித்து மண்டல மூத்த மேலாளர் பி.ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த திட்டத்தின் படி, “ஜனஸ்ரீ பீம யோஜனா”, “ஆம் ஆத்மி பீம யோஜனா” என்ற இரண்டு காப்பீடுத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த இரண்டு காப்பீடு திட்டங்களும் குறைந்த காப்பீடு கட்டணத்தில் (பிரீமியம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.
ஜனஸ்ரீ பீம யோஜனா காப்பீடு திட்டம் குறிப்பிட்ட 45 வகை பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரியது. இதில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இந்த காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு ஆயுள் காப்பீடாக ரூ.30 ஆயிரமும், இடையில் விபத்தில் மரணமடைந்தாலோ, அல்லது எவ்வித வேலையும் செய்ய முடியாத அளவு உடல் ஊனமுற்றால் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.
இதே போல் விபத்தால் குறிப்பிட்ட அளவு உடல் ஊனமுற்றால் ரூ.37,500 வழங்கப்படும். இதற்கு காப்பீடு கட்டணமாக வருடத்திற்கு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் காப்பீடு செய்து கொள்பவர்கள் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதும். மீதம் உள்ள ரூ.100 ஐ, இந்திய காப்பீடு கழகத்தின் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து செலுத்தப்படும்.
இதில் காப்பீடு செய்து கொள்பவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு உதவிதொகையாக மாதத்திற்கு ரூ.100 வழங்கப்படும். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சென்ற நிதி ஆண்டில் (2007-08) மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகையாக ரூ.76 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 73 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
ஆம் ஆத்மி பீம யோஜனா காப்பீடு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் சொந்தமாக நிலம் இல்லாதவர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம், இதில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் வருவாய் ஈட்டக்கூடிய ஒருவர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதில் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு, ஜனஸ்ரீ பீம யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன்கள் மாதிரி, அதே அளவு விபத்து இழப்பீடு, மரணம் அடைந்தால் இழப்பீடு, குழந்தைகளுக்கு படிப்பு உதவி தொகை ஆகியவை கிடைக்கும் என்று ஜெயின் தெரிவித்தார்.