பெங்களூரு: கர்நாடகாவில் நானோ கார் தொழிற்சாலை அமைக்குமாறு கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இருந்து நானோ கார் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றப்போவதாக ரத்தன் டாடா நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தங்கள் மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைக்குமாறு எடியூரப்பா அழைப்பு விடுத்தார். அத்துடன் கனரக மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியை பூனா, மும்பைக்கு சென்று டாடா மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து, கர்நாடகாவில் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை விளக்கும் படி பணித்தார்.
கர்நாடகாவில் உயர்நிலை குழுக்கூட்டம் நேற்று முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. இதற்கு பிறகு எடியூரப்பா கூறுகையில், டாடா நிறுவனம் கார் தொழிற்சாலையை, கர்நாடகாவில் அமைத்தால் எல்லாவித உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். அத்துடன் டாடா மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த், மாநில அரசை தொடர்பு கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக மாநில அரசின் இரண்டு மூத்த அதிகாரிகளை, டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை கர்நாடகாவில் நிறுவுவதற்கு தேவையான பேச்சுவார்த்தை நடத்த நியமித்தார்.
கர்நாடக முதலமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டாடா மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த் தலைமையில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஏற்கனவே மாநில அரசுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை, டாடா நிறுவன அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த, பெங்களூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.