நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் - வி.பி. சிங் வலியுறுத்தல்.
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (18:20 IST)
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் - வி.பி. சிங் வலியுறுத்தல்.
புதுதில்லி: விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் வலியுறுத்தி உள்ளார்.
தில்லியில் கிஷான் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள், நேற்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை, அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசுகையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே, இச்சட்டத்தில மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள 1894ஆம் வருடத்திய நிலம் கையகப்படுத்தல் சட்டம் விவசாயிகளுக்குச் சாதகமாக இல்லை. 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டமானது தொழில் வளர்ச்சியையே கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டது.
இச் சட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கால்வாய் போன்ற சமூகப் பயன்பாட்டுக்கு நிலத்தை கையகப்படுத்தியபோது அதை மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது பெரும் தொழில் நிறுவனங்கள் மேலும் லாபமடைவதற்காக தங்களது நிலத்தை அபகரிக்குபோது அதை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதன் விளைவாகத்தான் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விவசாய நிலங்களை வாங்க விரும்புபவர்கள் அரசு மூலமாக நிலத்தைக் கையகப்படுத்தாமல் விவசாயிகளை நேரடியாக அணுகி பேரம் பேசி இழப்பீட்டுத் தொகை வழங்கலாம்.
மேற்கு வங்கத்தில் சிங்கூர் போராட்டம், உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி போராட்டம் ஆகியவை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் விவசாயிகள் போராட்டத்தில் அரசு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது. 80 வயது ஆனவரைக்கூட கைது செய்து துன்புறுத்தி உள்ளனர். தாத்ரி போராட்டத்துக்குப் பின் நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்று வி.பி. சிங் கூறினார்.