புதுடெல்லி: முகேஷ் அம்பானி தலைமையில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் [Reliance Industries Ltd (RIL)] குஜராத்தில் ஜாம்நகரில் அமைத்து வரும் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் சோதனை ஓட்டம் சில நாட்களில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
புது டெல்லியில் இந்திய எரிசக்தி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ரிலையன்ஸ் எனர்ஜியின் மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த சில நாட்களில் சோதனை ஓட்டம் துவங்கும்.
இங்கு முதலில் தரநிர்ணய அளவான யூரோ-IV ரக பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும். பிறகு யூரோ-V ரக பெட்ரோல், டீசல் தயாரிக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஜாம்நகர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆறு பில்லியன் டாலர் செலவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது.
இது தினசரி 5 லட்சத்து 80 ஆயிரம் பீப்பாய் சுத்திகரிப்பு திறன் கொண்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல், டீசல் முதலியவை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.