கறிக்கோழி நுழைவு வரியை குறைக்க கோரிக்கை!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:17 IST)
பல்லடம்: தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு கேரளாவில் வசூலிக்கப்படும் நுழைவு வரியை குறைக்க வேண்டும் என்று கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கோழிக்கறிக்கு, கேரள அரசு 12.5 விழுக்காடு நுழைவு வரி விதித்துள்ளது. இதை 4 விழுக்காடாக குறைக்க வேண்டும். இந்த நுழைவு வரியால், 1 கிலோ கோழிக்கு வரியாக ரூ.5 செலுத்தப்படுகிறது.

தற்போது கேரளாவில் கறிக்கோழி பண்ணைத் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் கேரள அரசு தமிழகத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் கோழிகளுக்கு நுழைவு வரி விதித்துள்ளது.

இந்த வரியால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லும் கோழிகளின் விலை, உள்ளுர் கோழிகளுடன் ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.5 அதிகரிக்கிறது. இதனால் தமிழக கோழிகளின்
விற்பனை பாதிப்படைந்துள்ளது.

இந்த பாதிப்பு குறித்து பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதிகண்ணன் கூறுகையில், கேரள அரசு தமிழக கோழிகளுக்கு விதித்துள்ள நுழைவு வரியை 4 விழுக்காடாக குறைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மக்காச்சோளத்துக்கு 1 விழுக்காடு வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்