மம்தா பானர்ஜிக்கு சி.ஐ.ஐ வேண்டுகோள்!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:05 IST)
கொல்கத்தா:டாடா குழுமத்தின் நானோ கார் தொழிற்சாலை பிரச்சனையில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) வேண்டுகோள் விடுத்துள்ளது.

டாடா மோட்டார் நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் என்ற இடத்தில் நானோ ரக கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலைக்காக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலம் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கே திரும்ப கொடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கடந்த மாதம் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏற்பட்ட உடன்பாட்டில் இருந்து மாநில அரசு பின்வாங்கியதாகக் கூறி, மம்தா பானர்ஜி சென்ற வாரத்தில் இருந்து மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்.

இன்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவும் சந்தித்து பேசுகின்றனர்.

இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தொழிற்சாலை அமையும் பகுதியில் உள்ள நிலத்தை விவசாயிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும். இந்த தொழிற்சாலையும், அதன் துணை நிறுவனங்கள் ஒரே இடத்தில் அமைய வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு உருவாவதுடன், மேற்கு வங்கம் தொழில் மயமாவதற்கு முன் உதாரணமாக இருக்கும் என்பதையும் உணர வேண்டும்.

சிங்கூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எதிர்பாராதது. தற்போது இதற்கு தீர்வு காணும் பொறுப்பு போரட்டம் நடத்துபவர்களின் பிரதிநிதியாக உள்ள மம்தா பாணர்ஜிக்கு உண்டு. மம்தா பானர்ஜியும், அவரின் நண்பர்களும் காலம் தாழ்த்தாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று நம்புகின்றோம்.

மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்காலம் பலமான உற்பத்தி துறையை சார்ந்து இருக்கின்றது. மம்தா பானர்ஜியின் தலைமையில் போராட்டம் நடத்துபவர்கள், இந்த திட்டத்தை எதிர்ப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுவதை தடுக்கின்றார்கள்.

டாடா நிறுவனம் பலமுறை கார் தொழிற்சாலையும், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் ஒருங்கினைந்தவை என்று எடுத்துக் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் மாற்றம் செய்தால் நானோ கார் தயாரிப்பது தாமதம் ஆகும். அத்துடன் அதன் விலையும் மாறக்கூடும்.

இது ஆயிரக்கணக்கான மக்களின் சொந்த கார் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அளிக்க கூடியதாக மாறிவிடும்.

வீரியத்துடன் போராட்டம் நடத்துபவர்களை கையாள்வதில் மாநில அரசு மிக்க பொறுப்புடன் நடந்து கொள்கிறது. அத்துடன் போராட்டம் நடத்துபவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கவும், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவும் முயற்சிக்கிறத” என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் மூத்த ஆலோசகர் தருன் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்