போனஸ்- பஞ்சாலைகளில் போராட்டம்!

புதன், 1 அக்டோபர் 2008 (17:13 IST)
கோவை: போனஸ் பேச்சுவார்த்தையை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிக்காத பஞ்சாலைகளில் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை, ஈரோடு மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

கோவை காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் திங்கள்கிழமை கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போனஸ் பேச்சுவார்த்தையை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் முடிக்காத பஞ்சாலைகளில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இநத கூட்டத்திற்கு எம்.எல்.எப் நிர்வாகி மு.தியாகராஜன் தலைமை வகித்தார்.

இதில் தொழிற்சங்கத் தலைவர்கள் எம்.ஆறுமுகம், கே.ஜி.ஜெகநாதன் (ஏஐடியுசி), எஸ்.ஜி.சுப்பையன் (சிஐடியு), எஸ்.ராஜாமணி (எச்எம்எஸ்), கு.பொன்னுசாமி (எல்பிஎப்), வே.க.தனகோபாலன் (ஏடிபி), வி.ஆர்.பாலசுந்தரம் (ஐஎன்டியுசி), ஏ.பழனிசாமி (எம்எல்எப்) ஆகியோர் பங்கேற்றனர்.

போனஸ் கோரிக்கையை சமர்ப்பித்து 10 நாள்களுக்கு மேல் ஆகியும் ஒரு சில ஆலைகளைத் தவிர, பெரும்பாலான பஞ்சாலைகள் போனஸ் பேச்சைத் தொடங்கவில்லை. அக்டோபர் 10-க்குள் சுமுக முடிவு ஏற்படாத ஆலைகளில், நேரடிப் போராட்டங்களில் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. தனியார் ஆலைத் தொழிலாளர்களுக்கு நிகராக, கூட்டுறவு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கும் வகையில் விரைவில் பேச்சு நடத்தி ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்