அமெரிக்க நிதி நெருக்கடி இந்தியாவையும் பாதிக்கும்?

திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:01 IST)
புது டெல்லி : அமெரிக்காவில் வங்கி, முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, இதுவரை இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சில மாதத்திற்கு பிறகு, இதன் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பாதாக மத்திய அரசு கருதுகிறது.

பிரபல பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரம் பலமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தாலும், அமெரிக்காவின் பெரும் நிதி நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளதால். ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கவலை தெரிவித்து இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தரப்பில், அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டால், அரசியல் ரீதியாக அரசுக்கு எதிரானதாக அமைந்து விடும். இதை கருத்தில் கொண்டு, மக்களவைக்கு முன்னேரே பொதுத் தேர்தல் நடத்தாலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

இவர்கள் தங்கள் கருத்துக்கு சாதமாக, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதை உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, உலக அளவில் நிதி சந்தையில் தொடர்ந்து நெருக்கடி நிலவினாலும், இது இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது முட்டாள்தனம் என்று கூறியிருந்தார்.

தற்போது அமெரிக்கா, பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், புதன்கிழமை நாடு திரும்புகிறார். அவர் உலக தலைவர்களிடமும், சில பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இந்தியாவின் நிலைமை கணிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் பணவீக்க விகிதம் ஒற்றை இலக்கமாக குறைந்து விடும் என்ற அரசு எதிர்பார்க்கிறது. இது அரசுக்கு சாதகமாக அமையும்.

வரும் டிசம்பர் மாதம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள டில்லி, மிஜோரம் ஆகிய மாநிலங்களில் சட்டபேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள், வரப்போகும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

இத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் தேர்தல் நடத்தப்படாலாம். இந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களின் முடிவைப் பொறுத்து அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்