குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரிக்கை!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:46 IST)
மின்வெட்டால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கோரியுள்ளது.
இந்த சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்டு வரும் மின்வெட்டால் 25 ஆயிரத்துக்கும் அதிகமான குறுந்தொழில்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான குறுந்தொழில்கூட உரிமையாளர்கள் தனியார்களிடம் கடன் பெற்றே தொழில் நடத்தி வருகின்றனர். இதனால், வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, குறுந்தொழில்கூடங்களை காப்பாற்ற ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடனை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்.
மேலும், தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.