இணையதளம் மூலம் கலால் வரி செலுத்தலாம்!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (13:56 IST)
மத்திய கலால் மற்றும் சேவை வரிகளை அக்டோபர் 30 ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதுவரை மத்திய கலால் மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான பதிவு, வரி செலுத்துவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நேரடியாக மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

இதனால் காலதாமதம், அலுவலகங்களில் கூட்ட நெரிசல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதை நீக்கும் வகையில் இணையதளம் மூலமாக வரி படிவங்களை சமர்ப்பித்தல், வரி செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுகிறது.

இதனால் கலால் மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான பதிவுச்சான்றிதழ் பெற விண்ணப்பித்தல் மற்றும் வரி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை, இனி இணையதளம் வாயிலாகவே செய்ய முடியும்.

அத்துடன் இந்த அலுவலகங்களில் செலுத்திய கணக்கு மற்றும் அறிக்கை பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இப்புதிய வசதிகள் குறித்த விளக்கக் கூட்டம், திருப்பூர் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு திருப்பூர் பாரத ஸ்டேட் ஓவர்சீஸ் வங்கி உதவிப் பொது மேலாளர் ஜே.ஆனந்த நாராயணன் தலைமை வகித்தார். மத்திய கலால் வரித்துறை கோவை இரண்டாவது மண்டல கண்காணிப்பாளர் பி.வெங்கடேஸ்வரன், இந்த வசதியின் முக்கியத்துவம் குறித்து திருப்பூர் வர்த்தகர்களுக்கு விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மண்டல மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை உதவி ஆணையர் டபுள்யூ.எஸ்.சாமுவேல் வர்ஹேஸ் பேசும் போது, இந்த வசதி அக்டோபர் 30 ஆம் தேதி முதல் கோவை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த வசதி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் துவக்கப்பட உள்ளது. திருப்பூர், அவிநாசி, அன்னூர் பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மண்டல அலுவலகம் மூலம், கலால் மற்றும் சேவை வரியாக கடந்தாண்டு ரூ.23.6 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.30 கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்