பருப்பு, சிறு தானியம், சமையல் எண்ணெய் விலை குறைந்ததால், பணவீக்கத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
மத்திய நிதி அமைச்சகம் நேற்று செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.14 விழுக்காடாக இருப்பதாக அறிவித்தது.
இது இதற்கு முந்தைய செப்டம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் பணவீக்கம் 12.14% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.51% ஆக இருந்தது.
பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை அட்டவணையில் முக்கியமான 30 வகை பொருட்களின் விலை விகிதம் 7.58% ஆக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 7.72% ஆக இருந்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உப்பு, கடல் மீன், தேயிலை, பழங்கள், மசாலா பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது.
புகையிலை, ரப்பர், இரசாயன பொருட்கள், தாது வகைகள், இயந்திரங்களின் விலை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.