நெருக்கடியிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு- தாராபூர்!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:38 IST)
உலக பொருளாதார நெருக்கடியிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு- தாராபூர்!

மும்பை: உலக அளவில் பொருளாதார நெருக்கடி இருந்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று வருடங்களாக சராசரியாக 9.3 விழுக்காடாக உள்ளது என்று எஸ்.எஸ்.தாராபூர் தெரிவித்தார்.

உலக அளவில் வர்த்தகம் பற்றி விரிவான ஆய்வு நடத்தி தரும் நிறுவனம் டன் அண்ட் பிராட்ஸ்டிரிட் (Dun & Bradstreet). இது ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் (Reliance Mutual Fund) நிறுவனத்துடன் இணைந்து ரிஸ்க் மேனெஜ்மென்ட் என்ற தலைப்பில் இரண்டாவது ஆண்டு கருத்தரங்கு நடத்தியது. இதில் உலக அளவில் பொருளாதார நிலை சிக்கலான நிலைமை நிலவும் போது, நிதி, பங்கு சந்தை உட்பட பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய இடர்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் டன் அண்ட் பிராட்ஸ்டிரிட் இந்திய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மனோஜ் வைய்ஸ் (Dr. Manoj Vaish) தொடக்க உரையாற்றினார்.

அப்போது அவர், இடர்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இடர்பாடுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு வகையில் நாம் இடர்பாடுகள் பற்றிய காரணங்களை கவனத்தில் கொள்வதை தவிர்க்கின்றோம். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் விருப்பத்தில் அதிக வேறுபாடு இருக்கின்றது.

இவர்கள் இடர்பாடுகளை கணக்கில் கொண்டு மேற்கொள்ளும் வர்த்தக முடிவுகளுக்கும், இதனால் கிடைக்கும் பலன்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. நாம் இடர்பாடுகளை தவிர்க்க கவனத்தில் கொள்ளும் புள்ளி விபரங்களை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ரிலையன்ஸ் பரஸ்பர நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரந்த் குகானி (Vikrant Gugnani) பேசுகையில், இடர்பாடுகளை தவிர்க்கவோ அல்லது மறைமுகமாக அணுகவோ முடியாது. நம் பொருளாதார அடிப்படை மாறும் போது, அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தற்போது நம்முன் உள்ள சவால், இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் என்றார்.

நிதி தொடர்பான இடர்பாடுகளை தவிர்க்கும் முறை பற்றி நிதி அமைச்சகத்தின், பங்குச் சந்தை பிரிவு இயக்குநர் சி.எஸ்.மகாபத்ரா (C.S.Mohapatra) பேசுகையில், இன்றைய பொருளாதார நிலையில் பங்குச் சந்தை, அந்நியச் செலாவணி சந்தை போன்றவைகளில் ஒளி மறைவு இல்லாமல் இருப்பது அவசியம். அத்துடன் விதிமுறைகள் கட்டாயமாக கடைபிடிப்பது முக்கியமானது.

தேசிய பங்குச் சந்தையில் சமீபத்தில் அந்நியச் செலாவணி முன்பேர வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இது நாளடைவில் அந்நியச் செலாவணியில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க உதவி செய்வதாக அமையும் என்று கூறினார்.

பிரபல பொருளாதார நிபுணர் எஸ்.எஸ்.தாராபூர் (S.S.Tarapore) பேசுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த முன்று ஆண்டுகளில் சராசரியாக 9.3% விழுக்காடாக இருந்தது. ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் வெளியிட்ட காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கை முடிவுகளால், இந்த நிதி ஆண்டில் (2008-09) 8 விழுக்காடாக குறைய வாய்ப்பு உண்டு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய ஆண்டுகளை விட குறைந்தாலும், உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

2008-09 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில், அந்நிய நாட்டு கடன் விகிதம் 5.5% ஆக உள்ளது. அதே போல் ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட மற்ற பிரிவுகளையும் சேர்த்து அந்நிய நாடுகளுக்கு செலுத்த வேண்டிய தொகையும் 6.5% இருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு முடிவில் அந்நிய நாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய தொகை 405.6 பில்லியன் அமெரிக்க டாலர். அதே நேரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு உட்பட சொத்து மதிப்பு 331.7 பில்லியன் அமெரிக்க டாலர்.

இதில் அந்நியச் செலாவணி கையிருப்பு 289 பில்லியன் அமெரிக்க டாலர். இந்தியா எந்த நெருக்கடி நேரத்திலும். அந்நிய நாடுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கும் பலமான நாடாக உள்ளது. இது அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்று எஸ்.எஸ்.தாராபூர் கூறினார்.

இந்தியாவின் நிதி நிர்வாக அணுகுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கி பேசிய பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் ரூபா நிட்சுரு (Dr.Rupa Nitsure), தற்போது அதிகரித்து வரும் பணவீக்கம், வளர்ச்சியை கணக்கிடும் போது, ரிசர்வ் வங்கி வளர்ச்சியைவிட, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் என்றார்.

ரிலையன்ஸ் ஈக்விட்டி பிரிவின் தலைமை பொருளாதார நிபுணர், டாக்டர். அட்சி சேத் (Dr.Atsi Sheth) பேசுகையில், தற்போது பணவீக்கத்தின் பாதிப்புக்கள் கணக்கில் எடுக்கும் காலம். அடுத்து இரண்டாவது, மூன்றாவது கட்ட நடவடிக்கையாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக அமையும். இதனை குறைக்கும் நடவடிக்கை அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை தொடரும். இவை தற்போது அதிக அளவாக இல்லாவிட்டாலும், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை முக்கியமான காலமாகும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்