வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

சனி, 20 செப்டம்பர் 2008 (11:20 IST)
வங்கிகள் இணைப்பை கண்டித்து, வங்கி ஊழியர்கள் வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் பற்றி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ் மாநில பொதுச் செயலாளர் அ.ரங்கராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கித்துறை சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக வங்கிகளை இணைக்கும் வேலையை தொடங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா வங்கி, ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான வங்கிகள் இணைப்பால் பொது மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் சேவை செய்யும் அமைப்பாக வங்கிகள் மாற்றப்பட்டுவிடும்.

தற்போது வங்கிகள் ஒழுங்கு முறை சட்டத்தில், இந்திய தனியார் வங்கிகளில் ஒருவர் எத்தனை சதவீதம் பங்குகள் வைத்திருந்தாலும் அவருக்கு ஓட்டுரிமை 10 விழுக்காட்டிற்கு மேல் கிடையாது என்று உள்ளது இந்த சரத்தை நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நிறைவேறுவதற்காக நிலுவையில் உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள் இந்திய பெரு முதலாளிகள் மற்றும் அன்னிய நாட்டினர் கைகளுக்கு போய் சேர்ந்துவிடும்.

சில ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள அன்னிய நாட்டு வங்கிகள் பல லட்சம் கோடி ரூபாயினை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெற்றுவிடும்.

எனவே, இந்திய வங்கித்துறையை காப்பாற்றிடவும், பிரச்சினைகளை விரைந்து தீர்க்கக்கோரியும் வரும் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதில், பொதுத் துறை மற்றும் 26 தனியார் வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள். தமிழகத்தை பொறுத்தவரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் பணிபுரியும் சுமார் 75 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். 2 நாட்கள் வேலை நிறுத்தத்தால் ஏ.டி.எம். சேவையும் வெகுவாக பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.




வெப்துனியாவைப் படிக்கவும்