சென்னையில் தோல் வளர்ச்சிப் பூங்கா!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (15:58 IST)
சென்னையில் ஒருங்கிணந்த தோல் வளர்ச்சிப் பூங்காவும், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் மின்சக்தி துறை இணை அமைமச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.


சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கிவிட்டது. இது அடுத்த இரண்டாண்டுகளுக்குள் செயல்படத் துவங்கும்.

ஒருங்கிணந்த தோல் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, கொல்கட்டா, கான்பூர், நெல்லூர் உட்பட 5 நகரங்களில் ஒருங்கிணந்த தோல் வளர்ச்சிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இவை ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

அத்துடன் சென்னை, கொல்கட்டா, ரோட்டக் ஆகிய நகரங்களில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன.

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ஒருங்கிணந்த தோல் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் 2007-2012 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யப்படும்.

இத்திட்டத்திற்காக 10 வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ரூ.400 கோடி செலவிடப்பட்டது. இதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஒதுக்கீடு 3 மடங்கு அதிகம்.

இதன் மூலம் தோல் தொழில் துறை பெற்று வரும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த தொழிலில் 25 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள். 60 முதல் 70 சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்கள்.

200-08ஆம் ஆண்டுகளில் தோல் துறையின் ஏற்றுமதி மதிப்பு 3.5 பில்லியன் டாலராகும். நடப்பாண்டில் இது 4 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில் இதற்கான புதிய சந்தை உத்திகளை கண்டறிந்து வருகிறது.

காலணி தொழில் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் மொத்த தோல் ஏற்றுமதியில், காலணிகளின் பங்கு 35 விழுக்காடாகும். இந்த ஆண்டு இது 42 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலணி ஏற்றுமதி 2011 ஆம் ஆண்டில் 60 விழுக்காட்டை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நமது நாடு பெண்களின் காலணிகள உற்பத்தி செய்யும் துறையில் தற்போது ஈடுபட துவங்கியுள்ளது. பெண்களின் காலணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை உற்பத்தி செய்ய ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனம், பிரேசில் நாட்டு நிறுவனத்துடன் இணந்து ஆம்பூரில் பெண்கள் காலணி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அதிக அளவு முதலீடு செய்ய உள்ளது.

சுற்றுச்சூழல் பாகாப்புக்காக ஒருங்கிணந்த தோல் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.100 கோடி தொழிலாளர் நலனுக்காகவும், தொழில் பயிற்சி மற்றும் பாகாப்புக்காகவும் செலவிடப்படும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், யுரேனியம் பற்றாக்குறையால் கல்பாக்கத்தில் உற்பத்தி திறனான 440 மெகாவாட்டைவிட குறைவாக, அதாவது 180 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. இதே போல் கெய்டாவிலும் உற்பத்தித் திறனைவிட குறைவாக 300 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகிறது என்று தெரிவித்தார்.

எரிவாயு திட்டங்களில் போதுமான உற்பத்தி இல்லாதது, நெய்வேலியில் கூடுதல் சுரங்கம் அமைக்கும் பணி தாமதம், பருவமழை பொய்த்தது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்திலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசத்திலும் மின் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் உற்பத்தி துவங்கும். அப்போது 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.


வெப்துனியாவைப் படிக்கவும்