பொருளாதார நெருக்கடி ரஷியாவிற்கு பாதிப்பில்லை. –புதின்.
புதன், 17 செப்டம்பர் 2008 (15:57 IST)
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, ரஷியாவை பாதிக்காது என்று ரஷிய பிரதமர் விளாதீமிர் புதின் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த லீமென் பிரதர்ஸ் நிதி மற்றும் முதலீட்டு நிறுவனமும், மெர்ரில் லிஞ்ச் ஆகிய நிதி நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இதில் லீமென் பிரதர்ஸ் நிறுவனம் திவாலா தாக்கீது கொடுத்து விட்டது. மெர்ரில் லிஞ்ச் நிறுவனத்தை பாங்க் ஆப் அமெரிக்கா வாங்கியுள்ளது.
இத்துடன் அமெரிக்கன் இன்ஷ்யூரன்ஸ் குரூப் என்ற காப்பீடு நிறுவனமும் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு அமெரிக்க ரிசர்வ் வங்கி, நீண்ட கால அடிப்படையில் 85 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக கூறியுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. அத்துடன் அந்த நாடுகளின் நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு தொழிலிலும் ஈடுபட்டுள்ளன.
இதனால் பல்வேறு நாடுகளின் நிதி, பங்குச் சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது மாதிரியான நெருக்கடி ரஷியாவில் ஏற்படாது என்று பிரதமர் விளாதிமீர் புதின் கூறியுள்ளார்.
மாஸ்கோவிற்கு நேற்று வந்த அஜர்பய்ஜான் அதிபர் இலாகம் அலேய்வ் வரவேற்பு கூட்டத்தில் புதின் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரஷியாவின் பொருளாதார சந்தையில் சில பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்தி உள்ளோம். இது சிறந்த முறையில் இயங்குகிறது.
நாங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். ரஷிய நிதி அமைச்சகம் 6 பில்லியன் டாலர் அளவிற்கு, உள்நாட்டு கடன் நிறுவனங்களின் நாணய புழக்கத்திற்காக வழங்கி உள்ளது. ரஷிய ரிசர்வ் வங்கியும் 13 பில்லியன் டாலர் நிதி சந்தைக்கு உதவி செய்துள்ளது. புதன் கிழமையன்று நிதி அமைச்சகம் மேலும் 14 பில்லியன் டாலர் உள்நாட்டு நிதி நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது என்று கூறினார்.
ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பேசுகையில், ரஷிய நிதி சந்தைக்கு ஆபத்தில்லை. இதில் தேவையான அளவு பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசு ஆணையிட்டுள்ளது என்று கூறினார்.
ரஷிய அமைச்சரவை நேற்று கூடி, ரஷியாவின் நிதி சந்தையின் நிலைமை பற்றி விவாதித்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி வெளியிடப்படவில்லை.