உருக்கு விலையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று உருக்கு துறைச் செயலாளர் பி.கே. ரஸ்தோகி தெரிவித்தார்.
புது டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு “ உருக்கு குழாய்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது.
இதில் பங்கேற்ற ரஸ்தோகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு உருக்கு பொருட்களின் விலையை நிர்ணயிக்க விரும்பவில்லை. அரசு உற்பத்தியாளர்களுக்கும், பயன்பாட்டாளர்களுக்கும் இடையில் பாலமாக இருக்கவே விரும்புகிறது.
உலக அளவில் உருக்கு விலை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உருக்கு பொருட்களின் விலையும் குறையும்.
உருக்காலைகளுக்கு நீண்டகால அடிப்படையில் இரும்பு தாது வழங்க, இரும்பு சுரங்கங்களை வைத்துள்ள நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இவ்வகை ஒப்பந்தத்தால் உருக்கு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட விலையில் இரும்பு தாது கிடைக்கும். இதனால் உருக்கு, இரும்பு பொருட்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய 30 லட்சம் டன் உருக்கு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது.
இந்த நிதி ஆண்டில் உருக்கு, இரும்பு பொருட்களின் உள்நாட்டு தேவை 12 விழுக்காடு அதிகரிக்கும். அதே நேரத்தில் உற்பத்தி 6 விழுக்காடு மட்டுமே உயரும்.
இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது என்று ரஸ்தோகி கூறினார்.