டாடா நானோ கார் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிருபம் சென் தெளிவுபடுத்தினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா நானோ கார் தொழிற்சாலைக்கு மாநில அரசு விவசாய நிலத்தை கையகப்படுத்தி வழங்கியது.
இந்த நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில், பல்வேறு அமைப்புக்கள் போராடி வந்தன.
பதினைந்து நாட்களாக நடந்த போராட்டம் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தியின் முன் முயற்சியால் ஞாயிற்றுக் கிழமை இரவு முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இது குறித்து ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், நஷ்டஈடு கொடுக்காத விவசாயிகளுக்கு, கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக, நானோ கார் தொழிற்சாலா வளாகத்திற்குள்ளேயே நிலம் வழங்கப்படும்.
இந்த தொழிற்சாலை வளாகத்தில், டாடா மோட்டார் நிறுவனத்திற்காக, உதிரி பாகங்களை வழங்கும் நிறுவனங்களின் கட்டுமானப்பணி உடனடியாக நிறுத்தப்படும். விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கார் தொழிற்சாலை முன்பு நடந்த தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
மாநில அரசுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை குறித்து டாடா மோட்டார் நிறுவனம் அதிருப்தியை தெரிவித்தது.
டாடா மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவி காந்த், மாநில அரசுக்கு நேற்று கடிதம் எழுதினார்.
இதில் ஞாயிற்க்கிழமை நடந்த பேச்சு வார்த்தையில், கார் தொழிற்சாலைக்காக நிலத்தை கொடுக்க மறுக்கும் விவசாயிகளுக்கு, கார் தொழிற்சாலை அமையும் வளாகத்திற்குள்ளேயே 200 முதல் 300 ஏக்கர் நிலம் திரும்ப வழங்கப்படும். உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எதிர் புறத்தில் மாற்றப்படும் என்று மம்தா பானர்ஜி கூறியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த உடன்படிக்கை கார் தொழிற்சாலைக்கு பாதகமாக அமையும். இது குறித்து மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா முன்நிலையில் செய்தியாளர்களிடம், தொழில் துறை அமைச்சர் நிருபம் சென் கூறுகையில், டாடா கார் தொழிற்சாலையின் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. உதிரி பாகங்கள் தாயரிக்கும் தொழிற்சாலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி கார் தொழிற்சாலைக்குள் 300 ஏக்கர் நிலமும், மற்ற இடங்களில் 100 நிலமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது பற்றி, நிருபம் சென் கூறுகையில், நானோ கார் தொழிற்சாலையும், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் ஒருங்கினைந்த திட்டமாகும். இது முக்கியமான பிரச்சனையாகும்.
மாநில அரசு பேச்சுவார்த்தையின் போது, கார் தொழிற்சாலையின் திட்டங்கள் மாற்றி அமைப்பது அல்லது உதிரி பாகங்கள் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றி ஒத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இவை இரண்டும் ஒருங்கினைந்த திட்டமாகும்.
ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், கார் தொழிற்சாலையும், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் ஒருங்கினைந்தவை. விவசாயிகளுக்கு அதிக பட்ச நிலத்தை திருப்பி கொடுக்க தேவையான நிலத்தை அடையாளம் காண குழு அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து குழப்பத்தையே உண்டாக்கியுள்ளது என்று நிருபம் சென் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி வழங்க, நிலத்தை அடையாளம் காண்பிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ரபீந்திரநாத் பட்டாச்சார்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நில மீட்பு குழுவின் தலைவரும், சிங்கூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான பிச்ராம் மன்னா, மேற்கு வங்க தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநரும் இடம் பெற்று உள்ளனர்.