அணுசக்தி விலக்கு தொழில் வளர்ச்சிக்கு உதவும்: எஸ்.கே. ஜெயின்!
இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது என்று அணுசக்தி தொழில் நுட்ப வணிக குழு (NSG) முடிவு செய்திருப்பது, இந்தியாவின் அணு சக்தி தொடர்பான தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார்.
இது குறித்து இந்திய அணு சக்தி நிறுவனத்தின் [Nuclear Power Corporation of India limited (NPCIL) ] தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறியதாவது:
எங்கள் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தபடி அணுசக்தி தொழில் நுட்ப வணிக குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள், இந்தியாவின் நிலையை ஏற்றுக் கொண்டுள்ளன. இது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ள விதி விலக்கினால், இந்தியாவிற்கு மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கும் அது பயனளிப்பதாக இருக்கும்.
இந்த விதி விலக்கினால் இரு தரப்புமே பயன் அடைந்துள்ளன. இதனால் இந்தியாவின் அணு மின் உற்பத்தி தொழில் துறை வளர்ச்சி அடையும். அத்துடன் அணு சக்தி திட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த மற்ற தொழில் நிறுவனங்களும் வளர்ச்சி அடையும்.
இது அணு மின் உற்பத்தி நிலையங்களுக்கு, பல்வேறு பொருட்களை வழங்கும் துணை தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதுடன், உலக அளவிலான நிறுவனங்களாக மாறுவதற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
அத்துடன் இந்தியா அணு சக்தி தொழில் துறையின் உற்பத்தி கேந்திரமாக வளர்ச்சி அடைவதற்கும் வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.
இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் (திட்டம்) எஸ்.தாகூர் கூறும்போது, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியவுடன், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிடும்.
அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம் எரிபொருள் வாங்க துவங்கிவிடலாம். தற்போது குறைந்த திறனில் இயங்கும் அணு மின் உற்பத்தி நிறுவனங்களை முழு திறனுடன் இயங்கவைக்க முடியும் என்று கூறினார்.