அந்நிய கடன் அதிகரிப்பு!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (14:28 IST)
இந்தியா அந்நிய நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் சுமார் 30 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் "அந்நிய கடன் நிலவரம்" குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1993ஆம் ஆண்டில் இருந்து, இந்தியாவின் அந்நிய கடன் பற்றிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய கடன் என்பது, இந்திய அரசு, அந்நிய நாடுகளின் அரசு, உலக வங்கி, ஐ.எம்.எப்., நிதி நிறுவனங்கள் உட்பட வாங்கும் கடன்களைக் குறிக்கும்.

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததால் 2008 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய நாட்டு கடன் 30.3 விழுக்காடு உயர்ந்து 221.2 பில்லியன் டாலராக அதிகரித்தது (1 பில்லியன் = 100 கோடி).

அதே நேரத்தில் இந்த கடன் அளவுடன் ஒப்பிட்டால், அந்நியச் செலவாணி கையிருப்பு 140 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது 2006-07 ஆம் ஆண்டில் 117.4 விழுக்காடாக இருந்தது.

இந்த கடன் அதிகரித்ததற்கு காரணம், இந்தியா அந்நிய வங்கி, நிதி நிறுவனங்களுடன் வாங்கிய நீண்டகால கடன் 39.5%, குறுகிய கால கடன் 34.8% அளவிற்கு அதிகரித்ததே.

பல்வேறு நாடுகளின் அந்நிய கடன் பற்றி உலக வங்கி வெளியிட்ட “குளோபல் டெவலப்மெண்ட் பைனான்ஸ்-2008” என்ற அறிக்கையில், உலக அளவில் அதிக அளவு அந்நிய நாடுகளிடம் கடன் வாங்கிய முதல் பத்து நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறியது (2006இல் ஐந்தாவது இடத்தில் இருந்தது).

வெப்துனியாவைப் படிக்கவும்