இளைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் - பிரதமர்!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:18 IST)
இளைஞர்களின் திறனை மேம்படுத்த முதலமைச்சர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

புது டெல்லியில் இன்று சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருதுகளை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், 2020 ஆம் ஆண்டுக்குள் 50 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு இளம் சமுதாயத்தினரின் திறனை அதிகரிக்க வேண்டும். இதற்காக கல்வி நிலையங்கள் உட்பட எல்லா அமைப்புகளையும் இளம் சமுதாயத்தினரின் திறனை மேம்படுத்த பயன்படுத்தும் படி முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதே மாதிரி இளம் சமுதாயத்தினரின் திறனை மேம்படுத்துவது, வங்கிகளின் பணிகளில் ஒன்றாக வங்கிகளும் கருதவேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் எதிர்கால திட்டத்தை மனதிலி கொண்டு, 2020 ஆம் ஆண்டுக்குள் 50 கோடி பேரின் திறனை அதிகரிக்க தேசிய அளவில் திறன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக உயர்நிலைப்பள்ளி மட்டத்தில் வழக்கமான நேரத்திற்கு பிறகு, திறமைகளை மேம்படுத்தும் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் படி, முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதற்கு முதலமைச்சர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்த வாய்ப்புகளை தனியார், மற்றும் அரசு அமைப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

குறு, சிறு, நடுத்தர பிரிவைச் சார்ந்த தொழில்களை ஒரே இடத்தில் அமைக்கும் தொழிற்பேட்டை திட்டத்தை பற்றி குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், கைத்தறி, விசைத்தறி, கைவினை பொருட்கள் உற்பத்தி ஆகிய தொழில்களுக்கு, தலா இரண்டு இடங்களில் பெரிய அளவில் தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ளது. இந்த மாதிரியான முயற்சிகளால், இந்த தொழில் பேட்டையில் அமையும் தொழிலகங்கள் உள்நாட்டு, அயல் நாட்டு சந்தைகளுக்கு தேவையான பொருட்களை தயாரிக்க முடியும்.

குறு, சிறு, நடுத்தர பிரிவைச் சார்ந்த தொழில்களக்கு தேவையான கடன், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு இந்த தொழில் பிரிவுகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.1,48,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2005 ஆம் ஆண்டுகளில் ரூ.67,000 கோடியாக இருந்தது.

இவைகளுக்கு பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக கடன் கொடுத்து வருகின்றன. இதே மாதிரி மற்ற வங்கிகளும் கடன் கொடுக்க முன்வரவேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

குறு, சிறு, மத்திய தொழில் பிரிவு அமைச்சர் மகாபீர் பிரசாத் பேசுகையில், தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 5 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் குறுந் தொழிலகங்கள் தொடங்குவதன் மூலம் 37 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்