தமிழகத்தில் குறுவை பருவத்தில் தேவையான உரம் விநியோக்கும் பணியில் முழு மூச்சுடன் இப்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இப்கோ என்று அழைக்கப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் வருகின்ற ரபி (குறுவை) பருவத்தில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் எவ்வளவு உரம் தேவை என்று கணக்கெடுத்து வருகிறது.
ஓமனில் இருந்து ஓமன் இந்திய உரத் நிறுவனத்தில் இருந்து 32,371 டன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 15 ஆயிரம் டன் காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். மீதம் உள்ளவை மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இப்கோ பாரதீப் துறைமுகத்தில் இருந்து அனுப்பிய 2,577 டன் டி.ஏ.பி (20:25 ரகம்) எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் உரம், சமீபத்தில் மதுரைக்கு வந்து சேர்ந்துள்ளது. இது மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதே போல் பாரதீப் துறைமுகத்தில் இருந்து அனுப்பிய 2,577 டன் டி.ஏ.பி (20:20:13 ரகம்) உரம் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்துள்ளது. இது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.
அத்துடன் தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயிகளுக்கு வழங்க 2,500 டன் டி.ஏ.பி உரம் கொண்டுவரும் முயற்சியிலும் இப்கோ ஈடுபட்டுள்ளது.