விசைத்தறியாள‌ர்களுட‌ன் இன்று த‌மிழக அரசு பேச்சு!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (10:13 IST)
கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களின் வேலை ‌நிறு‌த்த போரா‌ட்ட‌ம் நேற்று 12வது நாளாக நீடித்தது. இன்று நடக்கும் 6வது சுற்று பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காவிட்டால், ஜவுளித்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூறு ‌விழு‌க்காடு கூலி உயர்வு கேட்டு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலை ‌நிறுத்த‌த்த‌ி‌ல் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளன. பலகோடி ரூபாய் மதிப்புள்ள காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

போரா‌ட்ட‌த்து‌க்கு முன்பு தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் 3 சுற்று பேச்சு நடந்தது. வேலை ‌நிறு‌த்த‌ம் தொடங்கியபின், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி 2 சுற்று பேச்சு நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து 12வது நாளாக நேற்றும் வேலை ‌நிறு‌த்த‌ம் நீடித்தது.

இந்நிலையில், கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் கோவை ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காவிட்டால், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர். இன்று 13வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ம் தொடரும் நிலையில், பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவேண்டும் என ஜவுளித் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்