அரசியல் கட்சிகளால் டாடாவுக்கு பாதிப்பு- கமல்நாத்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (12:00 IST)
மேற்கு வங்கத்தில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் இடையே நடக்கும் மோதலால் டாடா நிறுவனம் பாதிக்கப்பட்டடுள்ளது என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கமல் நாத் தெரிவித்தார்.

ஆசியன் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை நடத்த கமல்நாத் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ ரக கார் தாயரிக்கும் தொழிற்சாலை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 400 ஏக்கர் விவசாயிகளிடம் இருந்து பலவந்தாமாக பிடுங்கப்பட்டு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதை விவசாயிகளுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலாக தற்போது கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் எதிர்புறம் 500 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அங்கு கார் தொழிற்சாலையின் மற்ற பிரிவுகள் அமைத்துக் கொள்ளலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மம்தா பானார்ஜி கூறிவருகிறார்.

இது குறித்து சிங்கப்பூரில் நேற்று செய்தியாளர்களுடன் கமல்நாத் பேசுகையில், மேற்கு வங்கத்தில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதலால் டாடா நிறுவனம் பலிகாடா ஆகியுள்ளது. சிங்கூரில் ஏற்பட்டுள்ள பின்னடைவை நீக்க மத்திய அரசு சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும். இங்கு செய்துள்ள முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்காத வகையில் மத்திய அரசு சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும்.

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எழுந்துள்ள மோதலால், டாடா மோட்டார் நிறுவனம் பலிகடா ஆகியுள்ளது. இந்த நில பிரச்சனைக்கும், டாடா நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனையால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கமல்நாத் தெரிவித்தார்.

சிங்கூரில் திரிணாமுல் காங்கிரஸ் சென்ற 24 ஆம் தேதி முதல் போராட்டம் நடந்தி வருகிறது. இதனால் டாடா கார் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் உட்பட, எல்லா பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டாடா மோட்டார் நிறுவனம் ரூ.1 இலட்சம் விலையில் நானோ ரக காரின் விற்பனையை அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் துவக்க திட்டமிட்டுள்ளது.

சிங்கூரில் நிலவிவரும் நெருக்கடியால், இந்த கார் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற போவதாக சென்ற வாரம் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்