கார் தொழிற்சாலை அமைக்கும் சிங்கூரில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலை கவலையளிப்பதாக ரத்தன் டாடா கூறியுள்ளார்.
டாடா மோட்டார் மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் என்ற இடத்தில் நானோ ரக கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வருகிறது.
இங்கு கார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியதில் ஆரம்பம் முதலே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்கு வங்க அரசு, விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக நிலத்தை பிடுங்கி டாடா நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார்.
இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை, அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்.
இதற்கா ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் டாடா தேயிலை நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று ரத்தன் டாடா கொல்கத்தாவிற்கு வந்தார்.
அவர் மேற்கு வங்க தொழில் துறை அமைச்சர் நிருபம் சென்னை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் நிருபம் சென் செய்தியாளர்களிடம், சிங்கூரில் உள்ள நிலைமை குறித்து ரத்தன் டாடவுடன் விவாதித்ததாகவும், அவர் 24 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற போராட்டம் பற்றி கவலை தெரிவித்தார்.
அத்துடன் இங்கு நல்ல எண்ணத்துடன் கார் தொழிற்சாலைக்கு முதலீடு செய்திருப்பதாகவும், இந்த மாதிரியான நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயினும் கார் தொழிற்சாலை திட்டத்தை நிறுத்த போவதில்லை என்று கூறியதாக அமைச்சர் நிருபம் சென் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இந்த கார் தொழிற்சாலை அமைப்பதற்காக, விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளதாக ஆரம்பம் முதலே கூறி வருகிறது. இதை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தொழில் துறை அமைச்சர் நிருபம் சென் ஆகியோர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் 20 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்கும் வரை 24 ஆம் தேதிமுதல் காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கொல்கத்தா வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்த கார் தொழிற்சாலை பற்றி கருத்து தெரிவிக்கையில், மேற்கு வங்க மாநிலத்திற்கும். தொழில் வளர்ச்சிக்கும் மிக அவசியமானது. இது மேற்கு வங்க மக்களின் நலனுக்கு தேவையானது. இங்கு கார் உற்பத்தியாகும் என்று நம்புகிறேன்.
இங்கு எழுந்துள்ள பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் மாநில அரசு தீர்வு காணும் என்று எதிர்பார்ப்பதாக சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறினார்.