பின்னலாடை ஏற்றுமதியில் வீழ்ச்சி!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:26 IST)
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முதன் முறையாக குறைந்துள்ளது.

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்னணி இடத்தில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வருடத்திற்கு வருடம் அதிகரித்து வந்தது.

ஆனால் முதன் முறையாக சென்ற நிதி ஆண்டில் ஏற்றுமதி குறைந்துள்ளது என்று ஏ.சக்திவேல் தெரிவித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் 18வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது:

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் இது வரை இல்லாத வகையில், முதன் முறையாக பின்னலாடை ஏற்றுமதி குறைந்துள்ளது.

இங்கிருந்து 2006-07ஆம் நிதி ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது சென்ற நிதி ஆண்டில் (2007-08) ரூ.9,950 கோடியாக குறைந்தது.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் ஒருபுறம் ஏற்றுமதி குறைந்ததால் நஷ்டம் அடைந்துள்ளன. மறுபுறம் தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையில் அமெரிக்காவுக்கு வியட்நாம், கம்போடியா, இந்தோனிஷியா, நிகாரகுவா, வங்காள தேசம் ஆகிய நாடுகளின் பின்னலாடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் சீனா, இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
குறிப்பாக 338, 339 வகை பின்னலாடை ஏற்றுமதி குறைந்துள்ளது.

திருப்பூரில் இருந்து பின்னலாடை ஏற்றமதி அமெரிக்காவுக்கு குறைந்ததது போலவே. ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால், மற்ற நாடுகளின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

உலக சந்தையில் சீனாவின் ஏற்றுமதி படிப்படியாக குறைந்து வருகிறது. முன்பு இருந்ததை விட சீன பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இனி சீனா குறைந்த ஊதியத்தில் உற்பத்தி செய்து, மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது. அங்கு கச்சா பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. அத்துடன் சீன அரசு ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி கொடுக்க வாட் வரியையும் குறைத்துவிட்டது.

சீன அரசு டாலருக்கு நிகரான அதன் நாணய மதிப்பு 6.5 விழுக்காடு அதிகரிக்க அனுமதித்துள்ளது. சீனா இறக்கு செய்வதை விட, அதிக அளவு ஏற்றுமதி செய்கிறது.

இதன் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் சீனாவுக்கு சாதகமான நிலையே உள்ளது. இதனிடம் அளவுக்கு மேல் அந்நிய செலவாணி கையிருப்பு உள்ளது. இதனை குறைக்கும் வகையில் ஏற்றுமதியை கட்டுப்படுத்த நாணய மதிப்பை அதிகரித்துள்ளது.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகள் கடன் கொடுப்பதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது இந்தியாவுக்கு சாதகமான நிலை. இதை பயன்படுத்திக் கொண்டு, உலக வர்த்தகத்தில் இந்தியா போட்டியை எதிர் கொண்டு, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று சக்திவேல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்