அமெரிக்க கடன் பத்திரங்களில் செய்த முதலீட்டை, சீனா படிப்படியாக குறைத்து வருகிறது.
அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் அந்நிய நாடுகள் முதலீடு செய்கின்றன. இந்த கடன் பத்திரங்களில் அதிக அளவு முதலீடு செய்த நாடுகளின் வரிசையில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஜப்பான் உள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்த கடன் பத்திரங்களில் செய்த முதலீட்டிற்கு வருவாய் குறைந்துள்ளது. இதனால் அமெரிக்க கடன் பத்திரங்களை விற்பனை செய்துவரும் சீனா, மற்ற நாடுகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.
சீனா சென்ற மே மாதத்தில் மட்டும் 3 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது.
இந்த கடன் பத்திரங்களில் சீனாவின் முதலீடு ஜூன் மாத நிலவரப்படி 503.08 பில்லியன் டாலர்.
அமெரிக்க அரசின் தகவல் படி, இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்த நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் ஜப்பான் 583.8 பில்லியன் முதலீடு செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரிட்டனின் முதலீடு 280.4 பில்லியன் டாலராக உள்ளது.
சீனா, அமெரிக்க கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீட்டை குறைத்துக் கொள்வது பற்றி பெய்ஜிங்கில் உள்ள இன்டர்நேஷனல் பிசினஸ் அண்ட் எகனாமிக்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டிங்-ஜீயி (Ding Zhijie) கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீட்டை சீனா திரும்ப பெற்று, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்கிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு ஜீன் மாதத்தில் இருந்து குறைந்து வருகிறது. இதனால் பல நாடுகள் அந்நிய செலவாணி இருப்பை அமெரிக்க டாலராக வைத்துக் கொள்வதை குறைத்து வருகின்றன என்று டிங்-ஜீயி கூறியதாக சீனா டெய்லி என்ற தினசரி பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.