உருக்கு ஆலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று ஜிண்டால் உருக்கு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் வார்ப்பட ஆலைகளுக்கு தேவையான உருக்கு, இரும்பு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் லிமிடெட்.
மத்திய அரசு உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று கூறிவருகிறது. இதனை தயாரிப்பதற்கு தேவையான கச்சாப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட விலைகளில் விற்பனை செய்வதால் உருக்காலைகளின் இலாபம் குறைகின்றது.
இது குறித்து ஜிண்டால் உருக்காலையின் சேர்மனும் மேலாண்மை இயக்குநருமான சாஜன் ஜிண்டால் செய்தியாளர்களிடம் பேசுகையில், உருக்கு ஆலைகளின் இலாபம் குறையாமல் இருக்க, அரசு கச்சாப் பொருட்களை குறிப்பிட்ட விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உருக்கு பொருட்களின் விலையை அதிக காலத்திற்கு அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமில்லை.
உருக்கு ஆலைகளுக்கு கச்சாப் பொருட்கள் தாரளமாக கிடைப்பதை உறுதி செய்ய இயற்கை கனிமங்களை (இரும்பு தாது) ஏற்றுமதி செய்வதை கண்காணிக்க வேண்டும். இதன் ஏற்றுமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.