பி.எஸ்.என்.எல் பங்கு வெளியீடு தொழிற் சங்கத்துடன் பேச்சு!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (16:40 IST)
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் நிறுவனத்தின் பங்கு வெளியீடு தொடர்பாக மத்திய தொலை‌த் தொட‌ர்பு ம‌ற்று‌ம் ஒ‌லி‌பரப்பு‌த்துறை அமைச்சர் ஆ.ராஜா பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதற்கு தொழிற் சங்கங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு தொழிற் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இதில் சுமூக நிலையை எட்டுவதற்காக மத்திய தொலை‌த் தொ‌ட‌ர்பு மற்றும் ஒலிபரப்பு‌த்துறை அமைச்சர் ஆ.ராஜா, தொழிற் சங்க தலைவர்களுடன் இன‌்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜா பேசுகையில், பி.எஸ்.என்.எல் பங்கு விற்பனை குறித்து இதன் இயக்குநர் குழுவில் சென்ற வாரம் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பிறகு முதன் முறையாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்த பங்கு வெளியீட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் விளக்கினோம் என்று தெரிவித்தார்.

இது குறித்து பி.எஸ்.என்.எல் சேர்மன் குல்தீப் கோயல் கூறுகையில், இந்த பங்கு வெளியீட்டிற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பங்கு வெளியீட்டிற்கு உடனடியான தேவை ஏற்படவில்லை. ஆனால் இதற்கான முன் தயாரிப்பு பணிகளை ஏற்கனவே செய்து விட்டோம். இதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்த்தோம்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 100 பில்லியன் டாலர் மதிப்புடையது. இதன் பத்து விழுக்காடு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 10 பில்லியன் டாலர் திரட்டமுடியும். பி.எஸ்.என்.எல் 70 மில்லியன் சந்தாதார‌ர்கள் உள்ளனர் என்று கூறினார்.

பி.எஸ்.என்.எல் நிர்வாகம் இதில் பணியாற்றுபவர்களுக்கு சலுகை ‌விலை‌யி‌ல் பங்குகளை கொடுப்பது உட்பட பல சலுகைகளை வழங்குவதாக கூறி வருகிறது. ஆனால் தொழிற்சங்கங்கள் பங்கின் முகமதிப்பு விலையான ரூ.10 என்ற விலையில் தலா 500 பங்ககளை கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றன.

இது குறித்து தொழிற் சங்கங்களின் கன்வீனர் நம்புதிரி கூறுகையில், இதனால் ஊழியர்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. இவை பங்கு வெளியீ‌ட்டுக்கு ஒப்புதல் வாங்க கூறப்படும் ஆசை வார்த்தை. நாங்கள் பங்கு வெளியீட்டை முழுமையாக எதிர்க்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பி.எஸ்.என்.இல் நிறுவனத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாடு முழுவதும் தகவல் தொடர்பு பணி கடுமையாக பாதிக்கப்படும்.

இந்த நிறுவனத்தை நவரத்னா அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கும், விரிவாக்கத்திற்காக பங்குகளை வெளியிட்டு பங்குச் சந்தையில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதை தொழிற்சங்கங்கள் மறுத்து வருகின்றன.

இதற்கு முன்பு மத்திய அரசு இரண்டு முறை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்கு வெளியிட முயற்சி மேற்கொண்டது. இதை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த இடது சாரி கட்சிகள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால் கைவிட்டது.

பி.எஸ்.என்.எல் 5 முதல் 10 விழுக்காடு பங்குகளை வெளியிடும் என்று தெரிகிறது. இந்த பங்கு வெளியீடு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் வெளியிடப்பட்டு முடிந்துவிடும். இதன் பொது பங்கு மதிப்பு ரூ.300 முதல் ரூ.400 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தற்போது 90 மில்லியன் புதிய இணைப்புக்கான உபகரணங்களை வாங்குவதற்கான விலைப்புள்ளி பற்றி இறுதி முடிவு எடுக்கும் நிலையில் உள்ளது.

இந்த பொது பங்கு மூலம் திரட்டும் பணம் சி.எம்.டி.ஏ தொழில் நுட்பத்தில் செ‌ல்போ‌ன் இணைப்பு வழங்கவும், இந்தியா முழுவதும் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு வழங்குவதற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்த பயன்படுத்த எண்ணியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்