அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும், இந்தியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜெனிவாவில் நடைபெற்றுவரும் அமைச்சர்கள் மாநாட்டில் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடையும் அபாயம் உள்ளதென உலக வர்த்தக அமைப்பின் தலைமைப் பொதுச் செயலர் பாஸ்கல் லாமி கூறியுள்ளார்.
ஜெனிவாவில் கடந்த 21ஆம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் நேற்றுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தங்கள் நாட்டு விவசாயிகளுக்கும், விவசாய விளைபொருட்களுக்கும் அளிதுவரும் மானியத்தை குறைக்க மறுக்கும் வளர்ந்த நாடுகள், தங்களின் தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் விதிக்கும் இறக்குமதி தீர்வைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றன. இதனால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை அளித்த உலக வர்த்தக அமைப்பின் தலைமை பொதுச் செயலர் பாஸ்கல் லாமி, “தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து உறுப்பு நாடுகள் இறங்கி வந்து தீர்வு காண முன்வராவிட்டால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியுறும் ஆபத்து உள்ளது’ என்று கூறியுள்ளார்.
“இதுதான் பட்டவர்த்தனமான நிதர்சனம், இச்சூழ்நிலை மிகவும் சிக்கலானது, தோல்விக்கும், வெற்றிக்கும் இடையிலான விளிம்பில் முடிவு தொங்கிக்கொண்டிருக்கிறது” என்று கூறிய லாமி, உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பயனளிக்கும் ஒரு சாத்தியம் அமைச்சர்களின் பிடிக்கு உட்பட்டதாகத்தான் இருக்கிறது. அதனை எட்ட ஒவ்வொரு நாடும் தாங்கள் கடைபிடித்துவரும் நிலையிலிருந்து சற்று இறங்கி வரவேண்டும். அது சாத்தியமல்ல என்று கூறி ஒரு சிகப்புக் கோட்டை கிழிப்பதைத் தவிர்த்து, உடன்பாடு ஏற்பட நிலையைத் தளர்த்திக்கொண்டு முன்வர வேண்டும், ஒரு வாரத்திலோ, ஒரு மாத்த்திலோ அல்ல சில மணி நேரங்களில்” என்று லாமி கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்குத் தீர்வு காண பாஸ்கல் லாமி ஒரு சமரச திட்டத்தை அளிக்கவேண்டும் என்று சில உறுப்பு நாடுகள் கூறியுள்ளன. இந்த யோசனையை சில நாடுகள் எதிர்க்கின்றன. ஜெனிவா அமைச்சர்கள் மாநாடு இன்றோடு முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.