பணவீக்கம் 11.89 விழுக்காடு!
வியாழன், 24 ஜூலை 2008 (19:40 IST)
கடந்த 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின்படி நமது நாட்டின் பணவீக்கம் 11.89 விழுக்காடாக உள்ளது.
இது முந்தைய வாரம் இருந்த 11.91 விழுக்காட்டை விட 0.02 விழுக்காடு குறைவானதாகும். கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 4.76 விழுக்காடு மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மே மாதம் முதல் ஏறுமுகமாகவே இருந்த பணவீக்கம் முதன்முறையாகக் குறைந்துள்ளது. இதற்கு கடல் மீன், தேயிலை, இறக்குமதி செய்யப்பட்ட உணவு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே காரணம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி மொத்தமுள்ள 98 அடிப்படைப் பொருட்களில் 10 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதுடன், 54 பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
காஃபி, பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் பருப்பு வகைகள் சில உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் சிறிது உயர்வு காணப்படுகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், இரும்பு, உருக்கு, சிமெண்ட் உள்ளிட்ட சில முக்கியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்த காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணவீக்கம் ஏறுமுகமாகவே இருந்தது.