வருமான வரி செலுத்துபவர்கள், மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்தும் வருமான வரி செலுத்தலாம் என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.
வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள், சொந்த தொழில் செய்பவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வருமான வரியை மின்னணு சேவை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த வசதி இல்லாத வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், இனி மற்றவர்களின் கணக்கில் இருந்தும் வருமான வரி செலுத்தலாம். இவ்வாறு வருமான வரி செலுத்தும் போது அதற்குரிய படிவத்தில் பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் உட்பட மற்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வருமான வரி துறை அங்கிகரித்துள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள், அவர்களின் கணக்கில் இருந்து தான் வரி செலுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. மற்றவர்களின் கணக்கில் இருந்தும் வரி செலுத்தலாம்.
இதே போல் ஊதியம் வழங்கப்படும் போது பிடித்தம் செய்யப்படும் வரி, பணம் பட்டுவாடா செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் வரி போன்றவைகளையும் அடுத்தவர்களின் கணக்கில் இருந்து செலுத்தலாம்.
வருமான வரி துறை அங்கிகரித்துள்ள இணையதள வசதி உள்ள வங்கிகள் மூலம் செலுத்தலாம். அத்துடன் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் மூலமாகவும் வரி செலுத்தலாம் என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வசிக்காத அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய வங்கிகளில் கணக்கு தொடங்க உரிய ஆவணங்கள் இல்லா காரணத்தினால் வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை. இதனால் வரி செலுத்துவதில் பிரச்சனை ஏற்படுகிறது என்று வருமான வரி துறையிடம் முறையிட்டனர்.
இதே போல் உள்நாட்டைச் சேர்ந்தவர்களும், வருமான வரித்துறை அங்கிகரிக்கும் வங்கியில் தங்களுக்கு கணக்கு இல்லை. அத்துடன் தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியில் இணைய வசதி இல்லை என்று முறையிட்டனர்.