தேயிலை தொழிலாளர் ஊதியம் - உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

திங்கள், 21 ஜூலை 2008 (14:16 IST)
தமிழக அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயித்ததை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு ஜூன் 15 ஆம் தேதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து அ‌ண்ணாமலை தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ். நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது.

அ‌‌ண்ணாமலை தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தேயிலை, காபி, ஏலக்காய் ஆகிய தொழில்களுக்கு மத்திய அரசின் சட்டங்களான 1953 ஆம் வருட தேயிலை சட்டம், 1948 ஆம் வருட காபி சட்டம், 1984 ஆம் வருட நறுமனப் பொருள்கள் ஆகிய சிறப்பு சட்டங்களே பொருந்தும்.

இதனால் மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ். நாகமுத்து, மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்