நியாய விலை கடைகளில் பருப்பு!

சனி, 19 ஜூலை 2008 (12:09 IST)
பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் மானிய விலையில் பருப்பு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

சமையல் எண்ணெய் விலை அதிகரித்ததால், பொதுமக்களுக்கு மத்திய அரசு நியாய விலை கடைகள் மூலம் சமையல் எண்ணெய் வழங்கி வருகிறது. இதற்காக 1 லிட்டர் சமையல் எண்ணெய்க்கு ரூ.15 மானியம் வழங்கி வருகிறது.

இதே மாதிரி பருப்புகளுக்கும் மானியம் வழங்கி, நியாய விலை கடைகள் மூலம், வெளிச் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மத்திய நுகர்பொருள் அமைச்சகம், ஒரு கிலோ பருப்புக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை மானியம் வழங்கலாம் என்ற பரிந்துரையை, மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு விலை சராசரியாக 1 கிலோ ரூ.40 ஆக இருக்கின்றது. இதில் சமையல் எண்ணெய்க்கு வழங்கியது போல், மத்திய அரசு 25 விழுக்காடு மானியம் வழங்கலாம்.

இந்த மானிய விலை பருப்பை நியாய விலை கடைகள் வாயிலாக விற்பனை செய்வதா அல்லது வெளிச் சந்தையில் விற்பனை செய்வதா என்பதை மாநில அரசுகளின் முடிவுக்கு விடப்படும்.

மத்திய அரசின் புள்ளி விபரப்படி சில்லரை சந்தையில் துவரம் பருப்பு விலை 1 கிலோ ரூ.38 முதல் ரூ.46 வரை உள்ளது. துவரை விலை 1 கிலோ ரூ.30-40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில் பருப்பு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு பலவகை பருப்புகளை இறக்குமதி செய்கிறது.

மத்திய அரசு சார்பாக சென்ற நிதி ஆண்டில் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், பி.இ.சி, நாபீட் ஆகிய அரசு நிறுவனங்கள் பல ரக பருப்புகளை இறக்குமதி செய்தன. இவை சுமார் 15 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்தன. மத்திய அரசு இந்த நிறுவனங்களிடம் இந்த நிதி ஆண்டிலும் இதே அளவு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

இந்த அரசு சார்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்த பருப்புகளை விலை புள்ளி (டெண்டர்) மூலம் பகிரங்க சந்தையில் விற்பனை செய்கின்றன.

சென்ற ஆண்டு இந்தியாவில் 15.11 மில்லியன் டன் உளுந்து, துவரை, பட்டாணி, கடலை போன்ற பருப்பு வகைகள் உற்பத்தியானது. இந்தியாவின் தேவை 17 முதல் 18 மில்லியன் டன் உள்நாட்டு உற்பத்தி போக ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்