சந்தை விலைக்கு முத்திரைக் கட்டணம்-உயர்நீதி மன்றம் உத்தரவு!
சனி, 12 ஜூலை 2008 (14:29 IST)
நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்து வாங்குபவர்கள் சந்தை விலைக்கே முத்திரைக் கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு:
தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை மதுரையில் உள்ள ஒரு தம்பதிக்கு 2002ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தொழிற்சாலை தொடங்க சில காலி மனைகளை ஒதுக்கீடு செய்தது. இதன் விலை ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் என்று நிர்ணயித்தது.
இதற்கு 2006ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யும் போது, காலி மனைகளின் சந்தை மதிப்பு ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 200 என்று நிர்ணயித்து, இதற்கு தகுந்தாற்போல் முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று துணை பதிவாளர் கூறினார்.
இதை எதிர்த்து தம்பதிகள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் காலி மனை என்ன விலைக்கு வாங்கப்பட்டதோ, அந்த விலை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பிற்கு அதிகமாக முத்திரைக் கட்டணம் செலுத்துமாறு கூறுவது பதிவு கட்டண சட்டத்திற்கு எதிரானது என்று கூறினர்.
பத்திர பதிவாளர் காலி மனை மதிப்பு குறித்து விசாரணையில் இருப்பதால், பதிவு செய்த பத்திரம் கொடுக்க மறுக்கின்றார். பத்திரத்தை கொடுக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி தனது தீர்ப்பில்,
சொத்து வாங்குபவர்கள் முன்னரே அதை வாங்கி இருந்தாலும், பத்திர பதிவு செய்யும் போது உள்ள மதிப்பிற்கு முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும்.
1899ஆம் வருட இந்திய முத்திரை கட்டண சட்டம் பிரிவு 17இல், குறிப்பிட்ட சொத்து பத்திர பதிவு செய்யும் போது உள்ள மதிப்பை கணக்கிட்டு முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த சொத்து ஒதுக்கப்படும் போது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்புடைய பத்திரத்தை இரண்டு வாரங்களுக்குள் மனுதாராருக்கு வழங்க வேண்டும். அதில் இந்திய முத்திரைக் கட்டண சட்டம் 47-ஏ பிரிவு படி விசாரணை நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட வேண்டும்.
இதில் உள்ள வில்லங்கம் பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளிலும் குறிப்பிட்பபட்டு இருக்கும். இதன் மூலம் இந்த சொத்தை எதிர்காலத்தில் வாங்குபவர்களுக்கும் வில்லங்கம் தெரியவரும்.
இதன் விசாரணை முடிந்து உரிய முத்திரைக் கட்டணம் செலுத்திய பிறகு வில்லங்கத்தை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.