பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட மாட்டது என்று மத்திய ஜவுளி துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா தெரிவித்தார்.
பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதன் விலை உயர்வை தடுக்க பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜவுளி துறையைச் சேர்ந்த நூற்பாலைகள், நெசவாலைகள், ஆயத்த ஆடைகள், கைத்தறி துறை உட்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஜவுளி துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடியாது. ஏனெனில் நாங்கள் பருத்தி விவசாயிகளின் நலனை காப்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த வருடம் 100 பொதி பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி தொடரும்.
அதே நேரத்தில் ஜவுளி ஆலைகளுக்கு குறைந்த விலையில் பருத்தி கிடைப்பதற்கு, தனது அமைச்சகம் பருத்தி இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்படும் 14 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்க பரிந்துரைத்திருப்பதாக வகேலா தெரிவித்தார்.
பருத்தி ஏற்றுமதி செய்வதால்தான் விலை உயர்கின்றன என்ற ஜவுளி ஆலைகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வகேலா கூறுகையில், ஜவுளி ஆலைகள் இதன் விலை மலிவாக இருக்கும் போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பருத்தி ஏற்றுமதி 2003-04 ஆம் ஆண்டுகளில் 12 லட்சம் பொதிகளாக இருந்தது. சென்ற வருடம் சுமார் 100 லட்சம் பொதிகளாக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது. பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் உயர்வுக்கு மற்றொரு காரணம் பி.டி. ரக பருத்தியினால் உற்பத்தி உயர்ந்துள்ளது என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், 2007-08ஆம் நிதி ஆண்டில் 20.5 பில்லியன் மதிப்பிலான ஜவுளி துறை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் வளர்ச்சி நடப்பு ஆண்டில் 20 விழுக்காடாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பால், ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படாத அளவு சில சலுகைகள் வழங்கப்பட்டன.
முப்பது ஒருங்கினைக்கப்பட்ட ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது ரூ.17 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இவை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் செயல்பட துவங்கும். இதன் மூலம் 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் 10 ஜவுளிப் பூங்காக்கள் 2012ஆம் ஆண்டிற்குள் செயல்பட துவங்கும் என்று வகேலா கூறினார்.
திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் அந்நியச் செலவாணி முன்மதிப்பீடு (Derivatives Trade) வணிகத்தில் நஷ்டம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய ஜவுளி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
பருத்தி ஏற்றுமதி அவசியம் என்பதை விளக்கிய கூறிய ஜவுளி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜெயின் சிங், பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளது. 2007-08 ஆம் ஆண்டில் 315 லட்சம் பொதி உற்பத்தியாகி உள்ளது. உள்நாட்டின் தேவை 240 லட்சம் பொதி மட்டுமே. இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி 325 பொதிகளாக இருக்கும் என்று எதிரிபார்க்கபடுகிறது.
இந்நிலையில் உள்நாட்டு தேவையை விட உற்பத்தி அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி அவசியம் என்று கூறினார்.